(த.ராஜ்குமார் சுமன்)



திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கெதிராக மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்...

திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி திருக்கோவில் பிரதேச மக்களினால் இன்றைய தினம் கண்டணப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருக்கோவில் மணிக்கோபுர சந்தியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் அலுவலம் வரை சென்று இல்மனைட் அகழ்வினை நிறுத்தக் கோரி மக்களினால் மகஜர் கையளிக்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரதேச அபிவிருத்திக் குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தீர்மானங்களுக்கு அமைய தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது அத்தீர்மானங்களை மீறி மீண்டும் இவ் அகழ்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்த மக்கள் இன்றைய தினம் இதற்கான எதிராக இப்போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நிலவுகின்ற குறித்த பிரச்சனை தொடர்பில் பிரதேச சபையோ, பிரதேச செயலகமோ எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை, இந்த விடயம் தொடர்பில் இதற்கு முன்னரும் மக்களால் மகஜர் வழங்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட மகஜர் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரதேச செயலாளரின் உறுதிக்கு அமைய போராட்டம் நிறைவுறுத்தப்பட்டது.

இக் கண்டணப் போராட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மக்கள் விடுதலை முன்னணியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ரவீந்திர குணவர்த்தன, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், உள்ளூர் அரசியல் பிரதிநிகள், பிரதேச பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இல்மனைட் அகழ்வினை உடன் நிறுத்து, எங்கள் வளம் எமக்கு வேண்டும், எங்கள் வளங்களைச் சுரண்டாதே, கொள்ளையர்களே வெளியேறு, இல்மனைட் அகழ்வைத் தடை செய் போன்ற வாசங்களை ஏந்திவாறு கோசங்களை எழுப்பியும் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours