திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை சனிக்கிழமை(23) மாலை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தின் போது சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் அயராத முயற்சியின் பலனாக 800 மில்லியன் செலவில் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலையின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிலையில் சுகாதார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமினால் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப் பணிகளை துரித கதியில் முன்னெடுக்க ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் நிந்தவூர் மகப்பேற்று வைத்தியசாலை நிர்மாணப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சின் செயலாளர்வைத்தியர் பி.ஜி. மஹிபால ஒப்புதல் அளித்துள்ளதோடு குறித்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இக் கள விஜயத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலைகளில் அத்தியட்சகர்களையும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
குறித்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம். சீ. எம். மாஹிர், உள்ளிட்ட பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours