"ஈழம் முதல் பனி இமயம் வரை கொடி கட்டும் இசைத்தமிழன்.." என்று புலவர் மணி பண்டிதர் ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் புகழப்பட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு(1924-2024) இன்று(23.04.2024) ஆரம்பமாகின்றது.
ஆம்,உலகின்
முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார்
துறவறம் பூண்டு இன்றுடன்(23.04.2024) 100 ஆண்டுகள் ஆகின்றன.
1924
ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியில் சுவாமிகள் தான் வாழ்ந்த 55 வருடத்துள் தனது
32 ஆவது வயதில் பண்டிதர் மயில்வாகனன் என்ற நாமத்திலிருந்து சுவாமி
விபுலானந்தர் என்ற உலகப்புகழ் பெற்ற மந்திர சக்தியுடைய நாமத்தை
தாங்குகிறார்.
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை
மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்
சத்திரமும் கூடி வருவதால் சித்திரா
பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்
றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின்
பெயரும் ஒன்றாகி
சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் வரும் பௌர்ணமி தினம் சிறப்புப்
பெறுகின்றது.
இச்சித்திரா
பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில்
நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல்
எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது
கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமை
கின்றது.
சித்ரா பௌர்ணமி ஒரு தனிநபரின் நல்ல செயல்கள்
மற்றும் தீய செயல்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பர்.
அப்படிப்பட்ட உன்னதமான தினத்தில் சுவாமி காவியுடை தரித்து பெரும் துறவியானார்.
ராமகிருஷ்ண மடாலயத்தின் சுவாமி சர்வானந்தரின் இலங்கை விஜயம் மயில்வாகனன் வாழ்வில் மகத்தான மாற்றத்திற்கு வழி கோலியது.
அதுமட்டுமின்றி
1920-1922 களில் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபராக
சேவையாற்றிய காலம். அங்கு அவருக்கு உற்றநண்பராக விளங்கியவர்
மு. திருவிளங்கம் என்பவராவார்.
திருவிளங்கம் அவர்கள் எதிர்பாராத வகையில் காலமானார்.
இவரின் இழப்பு, மயில்வாகனனாரின் உள்ளத்தில் தீவிரமான
துறவு நாட்டத்தை ஏற்படுத்தியது. அவ்வேளையில்
யோகர் சுவாமிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
உலகியலில் சலிப்புற்ற இவர் தமது பதவியைத் துறந்து 1922
இல் இராமகிருஷ்ண மடத்தில் இணைந்து கொண்டார்.
1924 இல் சித்திராபௌர்ணமி தினத்தில்
இராமகிருஷ்ண மடத்தின்
தலைவராகவும் , இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச்
சீடர்களுள் ஒருவராக விளங்கிய சுவாமி சிவாநந்தரிடம் ஞானோபதேசம் பெற்று பிரபோதசைதன்யர் என்ற பிரம்மச்சரிய ஆச்சிரம நாமத்தை விட்டு
சுவாமி விபுலாந்தர்
என்னும் துறவறத் திருநாமத்தைச் பெற்றார்.
"ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல "
என்னும் வாக்கிற்கிணங்க துறவறமெய்தினார்.
கிழக்கின்
காரைதீவு மண்ணில் 1982.03.27 ஆம் திகதி அவதரித்த சுவாமியின் வாழ்க்கையின்
திருப்பு முனையான காலமாய் அமைந்தது துறவறத்தின் பின்னராகும்.
மயில்வாகனன்
என்ற நாமத்துடன் இலண்டன் பல்கலைக்கழக அறிவியல் பட்ட தாரியாய் , மதுரைத்
தமிழ்ச் சங்க பண்டிதராய் மேல்நாட்டு உடையுடன் கம்பீரமாக இருந்த கோலம் மாறி
காவிஉடை தரித்து , தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து துறவியாய்
பிறப்பெடுத்த நாள் இன்றைய சித்திரா பௌர்ணமி தினம் எனலாம்.
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
என்று சிந்திக்கும் நிலையினை அடைந்த காலம்தான் துறவுக்காலம்
இல்லறத்தில்
இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன் குடும்பஸ்தனாகி
குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே மறைந்திருப்பார்.
ஆனால் உலகம் போற்றும் பெருமகனாராக விளங்க வைத்தது இத்துறவுநிலை எனலாம்.
சுந்தரரை
இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத் தாட்கொண்டார். அரச போகத்தில்
இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி இறைஞானம் பெற்றார். அதே
போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் . எல்லாமே
இறைசித்தம்.
விஞ்ஞானம்
படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச
சன்மார்க்கத்தின் வழியில் பயணிக்கிறார். ஆனால் சைவத்தைக் கைகளில்
ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக்
கொள்ளல் வேண்டும்.
23 வருட துறவு வாழ்க்கை அவரை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
துறவறத்தின்
பின்னர்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற்
தமிழ்ப்பேராசியராகிறார்.இந்தியா தமிழ் நாட்டில் தமிழ் அறிஞர்கள் பலபேர்
இருந்தும் - ஈழத்து மைந்தனை எப்படித் தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச்
செட்டியார் கண்டுகொண்டார் என்றால் - அதுதான் துறவறத்தின் வலிமை எனலாம்.
உலகியல்
பற்றுக்களையும் அறுத்த சுவாமி மொழியில், சமயத்தில், கலாசாரத்தில், பண்பாட்
டில், ஆராய்ச்சியில், சமூகத்தொண்டில் ,இசையில் , நாடகத்தில் , கொண்ட
பற்றுக்களை இழந்தாரில்லை.அவற்றில் அவரின் பற்றானது பல்கிப் பெருகி
பயனளிக்கும் வகையில் அமைந்தது எனலாம். இவையாவும் துறவு வாழ்க்கையின் பின்
துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.
.எவருமே தொடாத துறை எவருடைய ஆராய்ச்சிக்கும் எட்டாத துறை. அந்தத்துறையினைத் தொட்டிருக்கிறார் எங்கள் விபுலா னந்தத்துறவி
இப் பேராய்ச்சி மலர்ந்ததும் முத்தமிழ் வித்தகரின் துறவின் பின்தான் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.
நரேந்திரன்
விவேகானந்தர் ஆனபின்தான் இராமகிருஷ்ண அமைப்பே உருவாகியது.மக்கள் சேவையே
மகேசன் சேவை என்பதை பல நிலையிலும் நிலை நிறுத்துகிறார். இந்த வழியினை
எங்கள் முத்தமிழ் முனிவரும் மனத்தினில் பதிக்கிறார்.
வீரத்துறவி
சுவாமி விவேகானந்தர் எப்படி துறவறத்தின் பின் எவ்வாறு துலங்கினாரே
அப்படியேதான் வித்தகரும் துறவுக்குப்பின் துலங்கி நின்றார் எனலாம்.
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை
பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்கின்றார்.
இலங்கையில்
பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில்
ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.இலக்கிய கட்டுரைகள், சமயசன்மார்க்கக் கட்டுரைகள் ,
ஆராய்ச்சி நூல்கள், மாநாடுகள் பலவற்றில் பேருரைகள், என்றுமே
பயன்தரும்வகையில் பல நயமிக்க , பொருள் பொதிந்த கவிதைகள், கவிதை நூல்கள்,
என்று பல்துறைகளில் - பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ்
வித்தகரின் துறவுக்காலமேதான் .
அதனால்தான்
அவருக்கு விழாக்கள் எடுக்கிறோம் ! அவருக்குச் சிலை எடுக்கிறோம் !
அவர்பற்றிய மலர்களையும் வெளியிடுகிறோம்! துறவு என்றால் காட்டுக்குள்
ஓடுவதல்ல ! துறவு என்றால் சமூகத்தைவிட்டு ஒதுங்கி நிற்பதும் அல்ல ! துறவு
என்றால் காவியை அணிந்து மொட்டை அடித்து மெளனமாய் குகைக்குள் புகுந்து
இருப்பதும் அல்ல ! மக்கள் மத்தியில் வாழவேண்டும்.மக்களுக்கு ஏற்ற சேவைகளைச்
செய்ய வேண்டும். மொழியை, பண்பாட்டை, கலாசாரத்தை, சமயத்தை, சன்மார்க்கத்தை,
அறிவியலை, சமூகத்துக்கு எப்படியாயினும் கொடுக்க வேண்டும் என்பதை துறவின்
வழியில் நின்று சாதித்தார் என்று அவுஸ்திரேலிய அறிஞர் ஜெயராமசர்மா
குறிப்பிடுகிறார்.
இத் துறவற நூற்றாண்டு விழா காலத்தில் அவர் தம் பணிகள் அவனியில் மேலும் வியாபித்து மிளிர வேண்டும்.
விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா,
ஆலோசகர் ,
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணி மன்றம், காரைதீவு.
Post A Comment:
0 comments so far,add yours