(எஸ்.அஷ்ரப்கான்)



நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.உவைஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
உணவினை விற்பனை செய்யும் மற்றும் அவற்றைக்கையாளும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வது உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்து மக்களுக்கு பாதுகாப்பான உணவினை வழங்குவதற்காகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் உணவு நிறுவனங்களுக்குரிய சட்ட ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது அலட்சியமாக இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உணவினை விற்பனை செய்யும் மற்றும் அவற்றைக்கையாளும் நிறுவனங்களில் காணப்படுகின்ற சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு கடந்த சில தினங்களாக பொத்துவில் பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. நேரடியாக உணவைக்கையாளும் நிறுவனங்களும் அதில் வேலை செய்பவர்களும் ஒரு மாத காலப்பகுதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். அத்துடன் வேலை செய்பவர்கள் தமக்குரிய மருத்துவ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளாலும், பிழையான உணவுப் பழக்கத்தினாலுமே இன்று அதிகமானோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர். உணவுகளை கையாளும் மற்றும் அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்கும் பொருட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours