( வி.ரி. சகாதேவராஜா)


 தமிழ் பிரதேசங்களுக்கு ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக ஒரு பாராளுமன்ற நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இங்கு இதுவரை கூட்டத்தையும் கூட்டவில்லை .இந்தப் பக்கமே வரவில்லை. இப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு தேவையில்லை.

 இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கல்முனையில்  தெரிவித்தார்.

கல்முனை தமிழ் மக்களின் பத்தாவது நாள் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறிதரன் எம்பியுடன் கலந்து கொண்டு கருத்து கூறுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்..

குறித்த ஒருங்கிணைப்பு தலைவர் தமிழ் பிரதேசம் எங்கும் மிகவும் பாரபட்சமான முறையில் நிதி ஒதுக்கீட்டை மேற் கொண்டுள்ளார். உதாரணமாக அவருக்கு வழங்கிய 10 கோடி ருபா நிதியில் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு மொத்தமாக 66 லட்ச ரூபாய் நிதியை ஒதுக்கி இருக்கின்றார் .

இங்கு 12 கிராம சேவகர் பிரிவுகளுடன் 65% தமிழ் மக்கள் வாழ்கின்ற காரைதீவு தமிழ் கிராமத்திற்கு ஆக 20 லட்சம் ரூபாய் நிதியை மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளார். 
மக்களிடம் எந்த கருத்துக்களும் முன்மொழிவுகளும் கேட்கப்படாமலே இந்த அற்ப ஒதுக்கீடு தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய  5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 35 வீத முஸ்லிம்கள் வாழ்கின்ற மாவடிப்பள்ளி மாளிகைக்காடு முஸ்லிம் பிரதேசத்திற்கு மீதி 46 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது .

இதேபோல் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கும் பச்சைப் பாரபட்சம் அநீதி இடம் பெற்றுள்ளது.

இதெல்லாம் இந்த அரசாங்க அதிபர் பார்ப்பதில்லையா?

இதை விட வேறு என்ன பாரபட்சம் நடக்க வேண்டும்?
 நாங்கள் கூறுகின்றோம் இவரது இந்த நிதி எமக்கு தேவையில்லை.  இவ்வாறு இனத்துவேசம் பிடித்த தலைமைத்துவம் எங்களுக்கு தேவை இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

அப்படிப்பட்ட அவர்தான் இங்கும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர். என்ன நடக்கிறது? ஒட்டுமொத்த தமிழ் பிரதேசங்களுக்கு அவரது தலைமைத்துவத்தை ஜனாதிபதி விலக்கிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் எமக்கு தேவையில்லை.

 இந்த மக்கள் 10 நாட்களாக மழையிலும் வெயிலிலும் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். பிரதேசமே முடங்கி கிடக்கிறது. பொறுப்பான அமைச்சர் என்ன செய்கிறார்? அரசாங்கம் இதுவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஏனிந்த அநீதி?

 ஒரு இனத்தின் நியாயமான அதிகாரத்தின் மீது இன்னொரு இனம் இவ்வாறு சீண்டிக் கொண்டிருப்பது கல்முனையில் மட்டும் தான். அதற்கானக ஒட்டுமொத்த முஸ்லிம்களை குற்றம் சாட்டமுடியாது. ஒருசில இனவெறி பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளே பின்னணியில் செயல்படுகிறார்கள்.  தற்போது உள்ள அரசாங்க அதிபரோடு இணைந்து தெற்கு பிரதேச செயலாளர் ஊடாக இந்த அதிகார பயங்கரவாதத்தை திணிக்கின்றார்கள். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆள் நினைக்கிறார்கள். ஒருபோதும் முடியாது.

 ஒரு இனம் தங்களுக்காக மாத்திரம் இல்லாமல் நமது பிள்ளைகளுக்காக போராடுகின்றது என்றால் அது தமிழினமாக தான் இருக்கும் .இதேவேளை ஒரு பிரதேச செயலாளர் அருகில் இருக்கின்ற இன்னொரு பிரதேச செயலகத்தின் மீது தனது அதிகார பயங்கரவாதத்தை மேற்கொள்வது என்றால் அதுவும் கல்முனையில் தான்.

 எனவே இங்கு நடைபெறுகின்ற ஒவ்வொரு செயற்பாடுகளையும் தடுக்கின்ற ஒடுக்குகின்ற செயற்பாட்டை மேற்கொள்வது ஒரு போதும் பொருத்தமில்லை.
 பொறுப்புள்ள அரசாங்கம் இந்த மக்களுக்கான நீதியை தாமதமின்றி வழங்க வேண்டும். இதுவே எமது கோரிக்கை. என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours