மாளிகைக்காடு செய்தியாளர் 

எமது சமூகத்தின் தலைவர்கள் தனக்கு அடுத்த படியில் உள்ளவர்களை தலைவர்களாக உருவாக்காமல் அவர்கள் எம்மை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களை ஓரங்கட்டும் விதமாக செயற்படுவது தலைமைத்துவ பண்பாக அமையாது. ஆனாலும் கிழக்கின் கேடயம் அந்த கொள்கையிலிருந்து மாறுபட்டு அம்பாறையிலிருந்து நிறைய இளம் ஆளுமை மிக்க தலைவர்களை உண்டாக்கும் பணியை முன்னெடுத்து வருகிறது என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார். 

எம்.எஸ். லங்கா வளாகத்தில் நேற்று  (31) நடைபெற்ற கிழக்கின் கேடயம் பிரதான இப்தார் நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தனக்கு கிழிருந்த அரசியல் ஆளுமைகளை தலைவர்களாக உருவாக்கினார். அதே போன்று பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களும் தனக்கு கிழிருந்த ஆளுமைகளை தலைவர்களாக உருவாக்கினார். அவர்களே இன்று எமது சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைவர்களின் காலத்தின் பின்னர் புதிய தலைமைகளை உருவாக்க தலைவர்கள் முன்வராமை பாரிய குறையாக இருக்கிறது. அதனை நிவர்த்திக்க கிழக்கின் கேடயம் எப்போதும் களப்பணி செய்துகொண்டே வருகிறது. 

கிழக்கின் கேடயம் அந்தப்பணியை சிறப்பாக செய்து எதிர்காலத்தை முன்னிறுத்திய தலைவர்களை உருவாக்கும் என்றார். இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் ஆலோசகர் எஸ்.எம்.எம். ஹனீபா, பொதுச்செயலாளர் யூ.எல்.என். ஹுதா, தவிசாளர் ஏ.கே.அமீர், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் இணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours