(சுமன்)




அன்னையின் அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் 36வது நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகிம்சை வழியில் ஈழத் தமிழ் மக்களுக்கு நியாமொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் காந்தியின் வழியில் தமிழ் ஈழத்தில் இந்திய அமைதிப் படையின் பிரசன்னத்தை தவிர்த்து அவர்களை இந்தியா மீள அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணா விரதம் இருந்து உயிரைத் துறந்த அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அன்னையின் அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. அன்று இந்தியா ஈழத்தமிழர்களுக்கு இழைத்தது மாபெரும் துரோகமாகும்.

அமைதி என்ற பெயரில் வருகை தந்து தமிழர்களை சொல்லொனாத் துயரில் ஆழ்த்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுடன் கோரிக்கைகள் பலவற்றை முன்நிறுத்தி மார்ச் மாதம் 19ம் நாளன்று அன்னை பூபதியம்மா உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். ஆனால் அகிம்சையைப் போற்றும் இந்தியாவின் கண்களின் அன்னையின் அகிம்சைப் போராட்டம் கணக்கெடுக்கப்படவில்லை.

அன்னையின் அறவழி மட்டுமல்ல தியாக தீபம் திலீபன் உட்பட ஈழத்தமிழர்களின் அறவழி ஆயத ரீதியான எந்தப் போராட்டத்தின் போதும் இந்தியா பாராமுகமாகவே இருந்திருக்கின்றது என்பதே வரலாறுகள்.

இன்றுவரைக்கும் இருக்கும் இந்த வரலாற்றை இந்தியா மாற்ற முற்பட வேண்டும். இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலவாறான நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கும் நிலைமை இந்தியாவிற்குத் தெரியாமல் இல்லை. அந்த நிலையில் இன்னும் இன்னும் ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகும் விதமாக இந்தியாவின் செயற்பாடுகள் இருப்பது மனவேதனையான விடயம். இருப்பினும் ஈழத்தமிழர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ இன்னும் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலைமைகளிலும் மாற்றங்கள் இல்லை.

அகிம்சை வழியில் மாகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அதே அகிம்சை வழியிலான எமது தியாகிகளின் போராட்டங்கள் மதிக்கப்படாமை காரணமாகவே பாரிய ஆயுதப் போராட்டத்தினால் இலங்கை அவதியுற்றது.

இந்த நிலையில் இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிற்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமைகின்றதோ அப்போதெல்லாம் ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சுகின்றது. இந்த வருடத்திலாவது அந்த நிலைமையை மாற்றி ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours