(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள அறபுக் கல்லூரிகளின் நிருவாகிகள், அதிபர்களுக்கான கல்வி உளவியல் செயலமர்வு (11) அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அறபுக் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில், அஷ்ஷெய்க் ஐ.எல்.எம்.ஹாஷிம் ஸூரி மதனி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், 35 அறபுக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 90 பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வின் இறுதியில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ் - றஷாதி (அதிபர், அபூபக்கர் சித்தீக் அறபுக் கல்லூரி), 'கற்றல் கற்பித்தலின் போது ஆசிரியர் மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும்? - ஓர் உளவியல் நோக்கு' எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் - நழீமி ( அமீர், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறா, எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர்), 'சமூக நலனில் அறபுக் கல்லூரிகள் மீதான பொறுப்புக்களும் கடமைகளும்' எனும் தலைப்பிலும், அஷ்ஷெய்க், கலாநிதி எம்.எல்.முபாறக்- மதனி (முதல்வர், தாருல் ஹுதா மகளிர் அறபுக் கல்லூரி, மருதமுனை), 'அறபுக் கல்லூரிகள் ஆளுமையுள்ள ஆலிம்களை எவ்வாறு உருவாக்க முடியும்' எனும் தலைப்பிலும் ஆழமானதும் அறிவுபூர்வமானதுமான அனுபவ ரீதியான உளவியல் கருத்துக்களை பங்குபற்றுனர்களின் கவனத்தை கவரும் வகையில் முன்வைத்தனர். 

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாஸிர் கனி - ஹாமியின் ஒருங்கிணைப்பிலும், மாவட்ட சபையின் உதவித் தலைவர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ.அன்ஸார் மௌலானா- நழீமியின் நெறியாள்கையிலும் நடைபெற்ற இச்செயமர்வுக்கான அனுசரணையை அட்டாளைச்சேனை ஷர்கிய்யா அறபுக் கல்லூரி பொறுப்பேற்றிருந்தது. மேலும், அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் யூ.எம்.நியாஸ் ஷர்கி மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் என்.ரீ.நஸீர்- ஹாமி ஆகியோர் நிகழ்வு வெற்றிபெறத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை நல்கினர். 


மேற்குறித்த நிகழ்வு மாவட்ட ஜம்இய்யாவின் உதவிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எல். பைஸல்- காஷிபியின் நன்றியுரையைத் தொடர்ந்து கப்பாறதுல் மஜ்லிஸுடன் நிறைவு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours