எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர்ப்பாசன குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விசேட வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட்டுள்ள அடைச்சகல் குளம் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கங்காணியார் குளம் உட்பட விவசாய நீர்ப் பாசன குளங்களை பார்வையிடுவதற்காக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் அப்பகுதிகளுக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் "Ridep project" எனும் திட்டத்தினால் மூன்று அடிகள் அணைக்கட்டு உயர்த்தப்பட்டு, நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ள மண்முனை மேற்கில் அடைச்சகல் குளத்தை நேரடியாக சென்று இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
புனரமைக்கப்படவுள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவின் கண்காணியார் குளத்தையும் இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
அத்துடன் அடைச்சகல் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக தற்போது 510 ஏக்கர் சிறு போக நெற் செய்கை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது அணைக்கட்டு மேலதிகமாக மூன்று அடிகள் உயர்த்தப்பட்டுள்ளமையால் நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாக சுமார் 240 ஏக்கர் மேலதிக சிறு போக நெற் செய்கை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கங்காணியார் குளத்திலிருந்து பெறப்படும் நீர்ப்பாசனம் ஊடாக 4300 ஏக்கர் சிறு போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த அணைக்கட்டு புனரமைக்கப்பட்டால் மேலதிகமாக 800 ஏக்கர் காணிகளில் சிறு போக நெற் செய்கை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
கங்காணியார் நீர்ப்பாசனத் திட்டத்தின் மேலதிக நீர் சேமிப்பு குளமாக பயன்படுத்தப்பட்டு வரும் புலுக்குனாவை குளத்தின் அணைக்கட்டையும் உயர்த்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் விதமாக விவசாய வீதிகள், கிராமிய நீர்ப்பாசனங்கள் போன்றன முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இராஜாங்க அமைச்சரின் கருத்திட்டத்திற்கு அமைவாக நீர்ப்பாசனத் தரிசுகள், மதகுகள், கால்வாய்கள், அணைக்கட்டுகள் என்பன விரைவாக புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours