(சுமன்)


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை அத்துமீறிய வகையில் கையகப்படுத்த முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தடுக்கப்பட்டது...

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தோனா பகுதியினை சிலர் அபகரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் நேற்றைய தினம் தொடக்கம் ஒரு குழுவினரால் குறித்த பகுதியில் பாதுகாப்பு கமராக்கள் பூட்டப்பட்டு வேலிகள் இடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அங்கு காணிகளை அடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் பாதுகாப்பு கமராக்கள் அகற்றப்பட்டு மாநகரசபையின் வாகனங்களில் ஏற்றப்பட்டு மாநகரசபைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன்,

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்குவந்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த காணி தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியானது மட்டக்களப்பு பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகளின்போது வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான பிரதான பகுதியாக காணப்படுவதுடன் அது அடைக்கப்படுமானால் கல்லடி தொடக்கம் காத்தான்குடி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன்,

கடந்த காலங்களிலும் இந்த பகுதியை அடைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours