எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி  செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு  மாவட்டத்தில் 12,224 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று  மட்டக்களப்பில் இடம் பெற்றது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி  செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (29) திகதி இடம் பெற்றது.  

இந் நிகழ்வில்  மேலதிக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சத்தியசீலன் கலந்து கொண்டு செயற்திட்டம் தொடர்பான விளக்கங்களை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைத்து  பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ் உதவித்திட்டம் வழங்கிவைக்கப்படவுள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு 3 வருடத்திற்கு உதவிகள் வழங்கப்படவுள்ளதுடன்,
மட்டக்களப்பு  மாவட்டத்தில் இவ் வருடத்தில் 12,224 குடும்பங்கள் வலுவூட்டப்படவுள்ளது.

இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் 625 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்பட உள்ளன.

குடும்பம் ஒன்றிற்கு வருமானத்தை உறுதிப்படுத்தி கொள்வதற்காக வாழ்வாதார திட்டங்களை தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பங்களிப்புடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.100,000.00 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட உள்ளது.
 
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் எம்.எஸ்.எம்.பசிர், ஆசிய வங்கியின் உயர் உத்தியோகத்தர்கள் என பல உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours