( வி.ரி.சகாதேவராஜா)
படிக்கின்ற
காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் மற்றும் புறக்கிருத்திய செயல்பாடுகளில்
இருந்து விலத்தியிருத்தல் வினைத்திறனான கற்றலுக்கு பக்கபலமாக அமையும்.
இவ்வாறு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தர கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதல்
நிலை மாணவனாக தெரிவாகி மாபெரும் சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரி
மாணவன் செல்வன் நிர்மலன் நாகுல் தெரிவித்தார்.
அண்மையில்
வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பெறுபேறுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
கணித பிரிவில் புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் நிர்மலன்
நாகுல் முதலிடத்தினைப் பெற்றிருந்தார்.
இவர்
மூன்று பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும்
அகில இலங்கை ரீதியில் 13 வது இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை
சேர்த்துள்ளார்.
இவர் பெற்ற சற் புள்ளி 2.8844 ஆகும்.
இவர் தனது மூன்று பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றமையினாலே இவரின்
சற் புள்ளி அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
அவரை வீட்டில் சந்தித்து உரையாடிய போது அவர் கூறியதாவது..
எதிர்கால மாணவர்களுக்காக என்ன கூற விரும்புகின்றீர்கள் என வினவியபோது...
மாணவர்கள்
கூடுதலாக நித்திரையினை தியாகம் செய்து இரவு பகலாக படிக்க
வேண்டியதில்லை.அத்தோடு தவணைப் பரீட்சைகளில் குறைய புள்ளிகளை பெறும் போது
அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
இறுதிப்பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டால் போதுமானதாகும்.
அனேகமானவர்கள்
கூறுவது போல் நேர அட்டவணை போட்டு அது மாதாந்தம், வாராந்தம் என வகுத்து
படிக்கும்படி கூறுவார்கள். ஆனால் நான் இப்படியெல்லாம் செயல்படவில்லை. நான்
நாளைக்கு என்ன படிக்க வேண்டும், எந்த பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும் என்பதனை இன்று இரவுதான் தீர்மானிப்பேன். இதனை மாதாந்த
அடிப்படையிலோ அல்லது வாராந்த அடிப்படையில் வகுத்துக்கொள்வதில்லை.நான்
எனக்கென்று ஒரு புதிய கற்றல் அனுகுமுறையினை வகுத்துக் கொண்டே படிப்பேன்.
இதன் மூலம் கற்றலை இலகுவாக்கி,விரைவாக கற்றுக்கொள்ள முடியும். எனக்கான
புதிய உபாயத்தினை பின்பற்றியதால் அதி கூடிய புள்ளியினைப் பெற்றுக் கொள்ளக்
கூடியதாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாணவனும் தங்களுக்கான
கற்றல் பாணியினை உருவாக்கி கற்பதன் மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக்
கொள்ள முடியும் என தெரிவித்தார்.
பாடசாலையின் பங்களிப்பு எப்படியிருந்தது என வினவிய போது. பாடசாலை வரவு முக்கியமானதாகும்.
ஏனெனின்
பாடசாலையில்தான் ஆசிரியர் மாணவர் இணைப்பு காணப்படும். ஒவ்வொரு மாணவனின்
சாதக, பாதக தன்மைகளை இனம் கண்டு ஆசிரியர்கள் வழிப்படுத்துவார்கள்.அத்தோடு
செய்முறை செயல்பாடுகளை பாடசாலைக்கு சென்றால் மாத்திரமே செயல்படுத்த
முடியும். உதாரணத்துக்கு பௌதீகவியல், இரசாயனவியல் பாடங்களுக்கான
செய்முறைகளை பாடசாலையில் மேற்கொள்ள வசதிகள் உள்ளது. இவ்வாறான செய்முறைகளை
மேற்கொள்வதன் மூலம் இப் பாடங்கள் மனதில் இலகுவாக பதிந்துவிடும்.ஆகவே
மாணவர்கள் கட்டாயம் பாடசாலைக்கு ஒழுங்காக செல்ல வேண்டும். இவ்வாறான
வசதிவாய்ப்புக்கள் தனியார் மேலதிக வகுப்புக்களில் காணப்படாது என மேலும்
தெரிவித்தார்.
இவர்
களுதாவளையைச் சேர்ந்த ஆனந்தகுமாரியினதும் பழுகாமத்தினைச் சேர்ந்த நிர்மலன்
தம்பதியினரின் சிரேஸ்ர புதல்வனும்,பழுகாமத்தை சேர்ந்த காலம்சென்ற நிர்வாக
உத்தியோகஸ்தர் தாந்தோன்றி பஞ்சவர்ணம் மற்றும் களுதாவளையை சேர்ந்த காலம்
சென்ற காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கணபதிப்பிள்ளை ஓய்வு பெற்ற ஆசிரியர்
பார்வதி ஆகியோரின் பேரனுமாவார்.
Post A Comment:
0 comments so far,add yours