( வி.ரி.சகாதேவராஜா,எஸ்.சபேசன்)

சம்மாந்துறை  வலயகல்விப் பணிமனையின் நிரந்தர வலயக்கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த செபமாலை மகேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்

சம்மாந்துறை  வலயகல்விப் பணிமனையின் 11 வது வலயக் கல்விப் பணிப்பாளரான திரு.எஸ்.மகேந்திரகுமார்  நேற்று (03) திங்கட்கிழமை  அலுவலகத்திற்கு வருகை தந்து கடமையேற்றுக்கொண்டார்.
அவருடன் அவரது பாரியார் மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிதர்சினி மகேந்திரகுமாரும் வருகை தந்திருந்தார். இவர் ஏலவே சம்மாந்துறை வலய முகாமைத்துவ பிரதி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான இவர், பணிப்பாளரைத் தேர்வு செய்யும் நேர்முகப் பரீட்சையில் தெரிவாகியதன் பலனாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க அவருக்கான நியமனத்தை வழங்கியிருந்தார்.

இவரது 26 வருட கால கல்வி சேவையில் ஆசிரியராக, மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் அதிபராக, உதவி மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளராக ,மற்றும் பட்டிருப்பு மட்டக்களப்பு மேற்கு பதில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இது இவ்வாறிருக்க, ஏலவே கடமையில் இருந்த வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா கடந்த மாதம் 10ஆம் வெள்ளிக்கிழமை காலமானார்.
 அந்த வெற்றிடத்தை நிரப்புமுகமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு   தற்காலிக நியமனமாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம் . ஜாபீரை நியமித்திருந்தமை தெரிந்ததே .

புதிய பணிப்பாளரை கல்விசார் உத்தியோகத்தர்கள் சார்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம் வை.யசீர் அரபாத்,எச்.நைரூஸ்கான், திருமதி நிலோபரா, பி.பரமதயாளன் ஆகியோர் மாலை சூட்டி வரவேற்றார்கள். பின்னர் அவர்களுடனான சந்திப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் சம்மாந்துறை வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் மாலை சூடி பொன்னாடை போர்த்தி வரவேற்றன.

சம்மாந்துறை வலய  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் சமுகமளித்திருந்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours