பாறுக் ஷிஹான்



இ.போ.ச பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி  விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பயணிகளுடன் வெள்ளிக்கிழமை(28) இரவு  அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர்  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேரூந்துடன் மோதி  விபத்தினை  ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக பேரூந்தின் சாரதி சுதாகரித்து பேரூந்தை நிறுத்த முற்பட்ட வேளை   அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள்   விலகி   சரிந்து பேருந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேரூந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் கல்முனை பகுதியில் இருந்து வந்த   1990 சுவ செரிய  அம்புலன்ஸ் ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை - வங்களாவடி பிரதான வீதிக்கு  வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பஸ் வண்டியை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.
 
அத்துடன் இலங்கை  போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேரூந்தில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்துள்ளதுடன்  பேரூந்து விபத்திற்குள்ளான போது சிலர் அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் மாற்று வாகனங்களில் அவர்கள் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடத்திற்கு அப்பகுதி மக்களின்  ஒத்துழைப்புடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours