இலட்சியப் போக்கில் வாழ்வை செம்மைப்படுத்திய இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள், சகலருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே சிறந்த நாகரீகத்தைக் கட்டியெழுப்பும் இலட்சியத்தில் பயணித்தவர் இறைதூதர் இப்றாஹிம். அன்னாரின் முன்மாதிரிகள் உலகம் உள்ள வரைக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளன. மானிட நாகரீகத்துக்கான முகவாசல்களை தனது மகன்களூடாக ஆரம்பித்த இலட்சியப் புருஷர் இறைதூதர் இப்றாஹிம். இஸ்ஹாக் (அலை) ஊடாக பலஸ்தீனத்திலும் இஸ்மாயில் (அலை) மூலமாக மக்காவிலும் சமூக நாகரீகத்துக்காக அவரிட்ட அடித்தளங்கள்தான், இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் என உலகின் பெரும்பான்மை மதங்களை தோற்றுவித்துள்ளன.
இலட்சியத்தில் திடகாத்திரம், செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்துச் செயற்பட்டதால் இறைவன், இறைதூதர் இப்றாஹிமின் பயணங்கள், புலப்பெயர்வுகளில் வெற்றியைக் கொடுத்தான். நவீன உலகில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இதே மாதிரியான திடகாத்திரம் மற்றும் நம்பிக்கைகள் அவசியம். சோதனைகள், இடர்கள் எல்லாம் தற்காலிகமானதே. இறைதூதர் இப்றாஹிமின் வழியில் செயற்பட்டால், இவற்றை தகர்த்தெறியும் தைரியம் எமக்கு கிடைக்கும்.
ஹஜ் கிரியைகள் இன்னும் "குர்பான்" கடமைகளை நிறைவேற்றும்போது, சக சமூகங்களின் உணர்வுகளை கௌரவிக்கும் வகையில், முஸ்லிம்கள் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறான புரிதல்கள்தான், சமூக மற்றும் சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்.
ஒரே தந்தையின் வழித்தோன்றல்களில் வந்த வேதங்களான யூதர்களும் முஸ்லிம்களும் இன்று பலஸ்தீனத்தில் மோதிக்கொள்வது, மானிட நேயர்களை பெரும் கவலைக்குட்படுத்தியுள்ளது. இந்நிலைமை நீங்க நாம் அனைவரும் பிரார்த்திப்பது அவசியம். மாற்று மதங்களை புரிந்துகொள்ளும் மனோபக்குவமே உலகின் நிரந்தர அமைதிக்கு வழிகோலும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours