ஒரு மனிதனின் ஆளுமை விருத்தியில் விளையாட்டு பயிற்சிகள் இன்றியமையாதது என்பதை யாவரும் அறிவர்
கல்முனைப் பிரதேசம் முன்னொரு காலத்தில் சகல துறைகளிலும் ஏனைய பிரதேசங்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்ததனை என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2004 முதல் 2016 காலப்பகுதியில் கல்முனை பிரதேசம் விளையாட்டு துறையில் அபரிதமான வளர்ச்சி அடைந்திருந்தது.
ஆனால் இன்றைய நிலையை அவதானிக்கின்ற போது மிகவும் வேதனையாக காணப்படுகின்றது.கல்முனையை சூழவுள்ள பகுதிகள் விளையாட்டுத் துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
எமது கல்முனை பிராந்தியத்தில் பல விளையாட்டு கழகங்கள் காணப்படுகின்ற போதிலும் போதியளவான நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமை மற்றும் விஷேடமாக மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான 400மீற்றர் மைதானம் இன்மையால் விளையாட்டுத்துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை அண்மையில் விளையாட்டு அமைச்சினால்
நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமான பிரதேசங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட மெய்வல்லுநர் பெறுபேறுகளின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆனால் எமது அண்மித்த பிரதேசங்களான
ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று சகோதரர்களுக்கு போதிய வசதிகளைக் கொண்ட 400m ஓடுபாதை கொண்ட விளையாட்டு மைதானம் அட்டாளைச் சேனையில் காணப்படுவதனால் அவர்களால் சிறந்த பெறுபேறுகளை மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் வெற்றிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது...
அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்வதை எண்ணி அனைவரும் சந்தோசப்பட வேண்டியுள்ளது.
கல்முனை பிராந்தியத்தில் சில விளையாட்டு மைதானங்கள் காணப்படுகின்ற போதிலும் தேசிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மைதானமாக கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம் காணப்படுகின்றது..
பிரதேச அரசியல்வாதி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக இருந்த காலம் கல்முனைக்கு பொன்னான காலம்.ஆனால் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தை முழுமையான மைதானமாக அபிவிருத்தி செய்வதனை விடுத்து பொருத்தமில்லாத இடங்களில் பார்வையாளர் அரங்குகள் அமைத்து இன்று அவை எவருக்கும் பிரயோசனம் இல்லாமல் இறந்து அழிந்து கொண்டிருக்கின்றது.
எனவே இந்த சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட 400 மீட்டர் ஓடுபாதை கொண்ட விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மெய்வல்லுனர் வீரர்கள் மாத்திரமன்றி ஏனைய கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சிறப்பான பயிற்சிகளை பெற்று மாவட்ட மட்ட, மாகாணமட்ட, மற்றும் தேசிய ரீதியான சாதனைகளை படைக்க முடியும்.
இவ்வாறு போதியளவான விளையாட்டு மைதான வசதிகள் இன்மையால் எமது இளைஞர் சமுதாயம் விளையாட்டு துறையை கைவிட்டு போதைப் பொருளுக்கு அடிமையாய் கொண்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
Post A Comment:
0 comments so far,add yours