குறிப்பிட்ட சில வலயங்களிலே குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே வளங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளினால் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே அம்பாறையில் வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்களின் போது மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நேற்று திங்கட் கிழமை தினம் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் நாங்கள் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் தெரிவித்திருந்தோம். குறிப்பாக திருக்கோவில் பிரதேச கல்வி வலயத்திலே விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகவும் பற்றாகுறையாக இருக்கின்றது. அதே போன்று பொத்துவில் மகா வித்தியாலத்திலே 03 விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் சீர்செய்யப்பட வேண்டும்.
கடந்த முறை எச்.என்.டி.ஏ பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நியமனத்தின் போது சம்மாந்துறை, கல்முனை, அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களிலே ஆங்கில ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு அந்நியமனங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் மேலதிகம் என்பது அவ்வலயங்களில் குறிப்பிட்ட பாடசாலைகளில் மாத்திரம் இருக்கின்றதே தவிர வலயத்தில் இல்லை. குறிப்பிட்ட வலயங்களில் உள்ள ஆரம்பநிலை பாடசாலைகள், பின்தங்கிய பாடசாலைகளில் இன்னமும் ஆங்கில ஆசிரியர்களுக்கான பற்றாகுறை என்பது இருந்த வண்ணமே உள்ளது.
குறிப்பிட்ட சில வலயங்களிலே குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மாத்திரமே வளங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நான் பல தடவைகள் தெரியப்படுத்தியிருந்தேன். தற்போதும் கூட மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் அதனைத் தெரியப்படுதியிருந்தேன். எனவே மிகவும் கண்டிப்பாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நான் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக அதிகஸ்ட பிரதேச பாடசாலைகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே வழங்கப்படுகின்ற ஆங்கில ஆசிரியர் நியமனங்களின் போது மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதிகமான ஆரம்ப பாடசாலைகளிலே தற்போது ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றமையையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours