பாறுக் ஷிஹான்

பயங்கரவாத அமைப்பாக புலிகள்  முத்திரை குத்தப்பட்டு, போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு எதிர்வரும் 04 ஆம் திகதி மாலை காரைதீவில் இடம்பெற உள்ளது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் காரைதீவு, நாவிதன்வெளி, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் ஆதரவாளர்களுடனான சந்திப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

காரைதீவில்   ஆதரவாளர்களை சந்தித்து பேசியபோது பிரசாந்தன் தெரிவித்தவை வருமாறு

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக வெற்றிகளை பெற்றிருந்த நிலையில். புலிகள் இயக்கத்தை அரசியல்மயப்படுத்துகின்ற பொறுப்பு சம்பந்தன் ஐயா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர்கள் அந்த பொறுப்பை சரியாக செய்தார்களா? புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே ஆகும்.

காலம் காலமாக தமிழ் மக்கள் தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்திருக்கின்ற தலைவர்கள் ஒழுங்காக பொறுப்புகளை செய்யவே இல்லை. இதற்கு மிக நல்ல உதாரணம் அம்பாறை மாவட்டம் ஆகும்.அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழக்கப்பட கூடாது என்பதால் கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இங்கு போட்டியிடவில்லை. அதனால்தான் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை தவற விட்டோம்.

அடுத்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி நிச்சயம் போட்டியிடும். அம்பாறை மாவட்டத்தில் இருந்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதுடன் வெளியில் இருந்து வேட்பாளர்கள் இறக்குமதி செய்யப்படவே மாட்டார்கள்.மாவை சேனாதிராசா இங்கு வந்து போட்டியிட்டு விட்டு சென்றார். அம்பாறை மாவட்டத்துக்கு வந்து வாக்குகளை பெற்று விட்டு சென்றவர்களை தேடிதான் கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அடுத்த தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது இரு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து இன்னொரு ஆசனம் தமிழ் மக்கள் விடுதலை கட்சிக்கு கிடைக்கின்றபோது அது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான விடிவெள்ளியாக அமையும். அதற்கான எழுச்சி காரைதீவு பிரதேசத்தில் இருந்து தோற்றம் பெற வேண்டும்.ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களின் மகுடமாக காரைதீவு விளங்குகின்றது. காரைதீவில் தோற்றம் பெறுகின்ற எழுச்சி அம்பாறை மாவட்டம் முழுவதும் பேரெழுச்சியாக பரிணமிக்கும் என்பது திண்ணம்.

ஆகவேதான் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாட்டை காரைதீவில்தான் நடத்த வேண்டும் என்பதில் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பற்றுறுதியாக உள்ளார். அம்பாறை மாவட்டத்துக்கான எமது கட்சி அலுவலகம் காரைதீவில் அமைக்கப்படும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அது போல ஏராளமான வேலை திட்டங்கள் எம்மால் அம்பாறை, திருகோணமலை ஆகிய  மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும். தலைவர் பிள்ளையானை 05 வருடங்கள் சிறையில் அடைத்தார்கள். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கதை முடிந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டார்கள்.

ஆனால் அது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி போராளிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு இளைஞர், யுவதியும்  பிள்ளையானாக மாறினார்கள். சிறையில் இருந்து கொண்டே மிக மிக அதிக படியான வாக்குகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பெற்று பாராளுமன்றம் சென்ற வரலாற்று சாதனையை தலைவர் பிள்ளையான் நிலைநாட்டினார்.கருத்துகளை கருத்துகளால் வெல்ல வேண்டுமே ஒழிய கருவிகளால் அல்ல என்கிற தாரக மந்திரத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி. எமது மக்களை கரை சேர்க்க வல்ல தலைமை மாலுமியாக தலைவர் சந்திரகாந்தன் விளங்குகின்றார். சமூகத்தை நேசிக்கின்ற, சுயநலம் இல்லாமல் தியாக சிந்தனையோடு செயற்படுகின்ற எவரும் மக்கள் தலைவராகலாம் என்பதற்கு அவரே முன்னுதாரணம்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் யாரும் பாரம்பரிய அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்லர். போராட்ட வடிவத்தை மாற்றி, வசைகளை, பழிகளையும் ஏற்று கொண்டு, அரசியல் கட்சியாக வடிவம் எடுத்து எமது மக்களின் இன்னல்களை துடைத்து கொண்டிருக்கின்றோம். வரலாறு எம்மை விடுவித்திருக்கிறது.கோட், சூட் போட்டவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்கிற மாயையை உடைத்தவர் தலைவர் பிள்ளையான். கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றபோது அவருக்கு வயது 34. அவர் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத தலைவர்.

பாட்டாளிகளும் அரசியல் செய்யலாம் என்பதையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகள் நிரூபித்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் ஆயிரம் பிள்ளையானகள் தோற்றம் பெற வேண்டும். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அடிமை விலங்குகள் ஒடிக்கப்பட வேண்டும். அபிவிருத்திகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours