(சுமன்)



இரா.சம்பந்தர் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது அதனை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அனைவரும் ஓரணியில் திரளாக ஒன்றுபடுவதே நாம் அவரின் ஆன்மாவிற்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான இரா.சம்பந்தர் அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை இந்திய உடன்படிக்கையில் வடகிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் காத்திரமாக இந்திய பிரதமருக்கு வலியுறுத்தி அவ்விடயத்தினை ஒப்பந்தத்தில் இடம்பெற செய்த வரலாற்று கடமையினை ஆற்றியவர் 
இரா.சம்பந்தரே என்பது வரலாறு.
இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய கோரப்பட்ட
இடைக்கால நிர்வாகத்திற்கு கூட்டனி சார்பில் இரா.சம்பந்தரே  பிரேகரிக்கப்பட்டவராவார்.

2004 தமிழினத்தின் ஜனநாயக ஒற்றுமையினை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒன்றிணைத்து ஜனநாயக அரசியல் பலத்தினை  மக்கள் ஆணைக்காக கொண்டுசெல்லும் செயற்பாடுகளில் தலைமையாக இரா.சம்பந்தர்  சிறப்பாக செயலாற்றினார் என்பதனை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

2009 போர் மௌனித்துப்போனதின் பின்னரான தமிழ் அரசியல் பரப்பில். 2015 இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகியமை அவரின் இராஜதந்திர நகர்வின் உச்சமாகவே கருதப்படுகிறது. அந்தவகையில் இனத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு பணிகள் சர்வதேச நாடுகளின் உடனான பேச்சுக்கள் குறிப்பாக இந்திய தரப்புக்களுடனான நகர்வுகளில் இரா.சம்பந்தர் ஆற்றிய பணிகள் என்றும் தமிழினத்தால் நினைவில் கொள்ளத்தக்கது.

இந்த நிலைமைகளில் இரா.சம்பந்தரின் மறைவு பெரும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை தமிழ்தேசிய பரப்பில் உண்டாக்கி உள்ளதென்பதே உண்மையாகும்.
தமிழினம் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுமின்றி
சமூக பொருளாதார அரசியல் பலம் சிதைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு திக்கற்ற விதமான தமிழினத்தின் தற்போதைய நிலையில்  இரா.சம்பந்தரது இழப்பு பேரிழப்பாகும். அதன் தாக்கமானது எதிர்கால தாயக பிராந்திய சர்வதேச அரசியல் விவகாரங்களை கையாளுகின்றபோது தமிழினத்திற்கு பெரும் பின்னடைவுகளை உருவாக்கும்.

இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒன்றினைவதே 
இரா.சம்பந்தருக்கு நாம் ஆற்றுகின்ற அஞ்சலியாகும்.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எமது மக்களின் சார்பிலும் போராளிகள் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours