திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை(18) நடைபெறும்.
திருக்கோவில்
ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி அமாவாசை உற்சவமானது எதிர்வரும்
2024.07.18 ஆம் தேதி வியாழக்கிழமை ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம்
சுரேஸ் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து 2024.08.04ம் திகதி
ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.
அவ் ஆலயம் தொடர்பான வரலாற்று ஆய்வு ரீதியான கட்டுரை இது..
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனுமாகி
நிலவுநதி அரவுபுனை நிருமலனுமாகி
அலகிலா சோதியாய் அம்பலத்தாடும் அரனாரின்
நெற்றிவிழிப்பொறியின் உலகம்உய்ய வந்து
உதித்தவர் முருகப்பெருமான்
வெண்ணாவல் மரத்திலே வேல்வடிவாக முருகப்பெருமான்
வீற்றிருந்த திருத்தலம் திருக்கோவில் ஆகும்.
அந்தரத்து தேவர்களும் அனுபவித்த
விண்ணவரும் மண்ணவரும் வியந்துபோற்ற
வடக்குமுகமாகவிருந்த வேற்பெருமான்
தானாகவே கிழக்குமுகமாகத் திரும்பிய
புண்ணியபதி திருக்கோவில்.
ஆடிஅமாவாசை அன்று ஆறுமுகமோடு ஆழ்கடலில் தீர்த்தமாடி பிதிர்கடன் நிறைவேற்றும் கோவில்.
அன்று நாகர்முனை வெண்ணாவலம்பதி கந்தபாணத்துறை என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட திருக்கோவில் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாறு.
மட்டக்களப்பை
பிரசன்னசித்து என்பான் ஆண்டகாலத்தில் கலிங்க குமரனான புவனேக கயபாகு தன்
மனைவியுடன் மக்கட்பேறில்லாக் கவலையினால் வாடித் தலயாத்திரை மேற்கொண்டு
இராமேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் திருக்கோணமலை எனும் புண்ணிய பழம்பெரும்
பதிகளைத் தரிசித்துவிட்டு நாகர்முனையிலிருக்கும் (தற்போது திருக்கோவில் )
வேற்பெருமானின் சிறப்பினை கேள்வியுற்று மட்டக்களப்புக்கு வந்தான்.
புவனேக கயபாகுவின் மனைவியாகிய தம்பதிநல்லாள் ஒரு சோழ அரசன் மகளாவாள்.
நாகர்முனையிலுள்ள
சுப்பிரமணியர் ஆலயத்தை நல்லமுறையில் அமைத்தற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை
அவர்கள் வரவால் பெற்ற மட்டக்களப்பு மன்னனும் புவனேக கயபாகுவிற்கு தன்
கருத்தைத் தெரிவித்து அவன் துணையை வேண்டினான்.
அதற்கிணங்கித்
தம்பதி நல்லாளின் தந்தையான திருச்சோழனுக்கு புவனேக கயபாகு நல்ல சிற்பியர்
முதலானோரை அனுப்பிவைக்குமாறு விட்ட ஓலையின்படி கைதேர்ந்த சிற்பநூல் வல்லார்
பலர் நாகர்முனைத் துறைமுகத்தில் வந்திறங்கினர்.
சிற்பக்கலையின் சிறப்பை எடுத்து விளக்குவதான திருக்கோவிலின் திருப்பணியும் நன்முறையில் விரைவிலே நிறைவேறலாயிற்று.
மட்டக்களப்பிற் சிறப்புற எழுந்த முதலாவது பெருங்கோவிலாதலால் "திருக்கோவில்" என மன்னன் அதற்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தான்.(கி.பி.28)
மேலும் ஆலயத்தின் திருப்பணி வளர்ச்சிக்காய் மன்னன் பல ஏக்கர் வயல்நிலங்களைக் கொடுத்தான்.
அதற்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக ஒரு பெரிய குளத்தையும் சங்குமண்கண்டி (சங்கமான்கண்டி) மலைக்கு கீழ்ப்பால் அமைத்துக் கொடுத்தனர்.
மேலும்
திருக்கோவிலுக்கு பக்கத்தில் ஒரு வாவியினைத் தன் தாயாகிய தம்பதிநல்லாள்
நினைவாய் அமைத்து அதற்குத் தம்பதிவில் என்று பெயரிட்டனர்.
"வில்" எனும் சொல் மட்டக்களப்பில் குளத்தைக் குறிக்க வழங்குவதாகும்.
இக்குளத்தைச் சார்ந்த பகுதியில் அமைந்த ஊரும் "தம்பதிவில்" என இருந்து இன்று " தம்பிலுவில்" என்று மருவி வழங்கப்பெறுகிறது.
திருக்கோவில்
சித்திரவேலாயுத சுவாமியின் அருளால் புவனேக கயபாகுவிற்குப் பிறந்த மகனான
மேக வருணன் பின்னர் கி.பி.48 ல் உன்னரசக்கிரியின் ஆட்சிபீடமேறினான்.
"உன்னரசுக்கிரி"
என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாலர்நகைநாடு (பாணமை)
என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு
சான்றுகளாலும் தற்காலம் சன்னியாசிமலை என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது.
ஆலயங்களை அழித்த போத்துக்கீசர்..
பிற்காலத்தில் போத்துக்கீசர் இலங்கையிலுள்ள பல நூற்றுக்கணக்கான ஆலயங்களை அழித்ததாக குவரோஸ் அடிகள் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
போத்துக்கீச தேசாதிபதி அசவீடோ தகர்த்தெறிந்த ஆலயங்களுள் திருக்கோவிலும் ஒன்றாகும்.
திருக்கோவிலில் 3 கோபுரங்கள் இருந்தன. என்றும் அவை மூன்றும் அசவீடோவினால் அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார் குவரோஸ் அடிகளார்.
அதன்தொடர்ச்சியாக
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரார் கோயிலைத் தகர்த்தெறியும் நோக்கோடு
சென்ற போர்த்துக்கீசர் அங்கிருந்த கருங்கல்லாலான நந்தி கோவில் பூசகரின்
ஏவற்படி புல் தின்றதைக் கண்டு வியந்தவராய்த் தாங்கள் கருதியபடி அழிவுசெய்ய
துணிவு பெறாது மீண்டனர் என்று ஒரு கதை கூறுகிறது.
அவ்வாறே
மண்டூர்க் கந்தசுவாமி கோவிலை நோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் கோவில்
வீதியை அடைந்ததும் கருங்குளவிகளாற் கொட்டப்பெற்றப்பெரும் பதைபதைத்து
உயிருக்கஞ்சி ஓடினரென்றும் அவர்கள் ஓடும்போது அவசரத்தில் தமது
துப்பாக்கிகள் வாள் ஈட்டிகள் என்பவற்றை விட்டுவிட்டுச்சென்றதாகவும்
கூறப்படுகிறது. அவைகள் இன்றும் ஆலயத்தில் உள்ளன என்பது வரலாற்று
உண்மையாகும்.
திருப்படைக்கோவில்கள் சில வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டவையாகும்.
வெருகல்
ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம்,
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ,பாண்டிருப்பு திரௌபதை அம்மன்
ஆலயம், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், மாமாங்கம்
பிள்ளையார் ஆலயம் போன்றனவாகும்.
திருப்படைக்கோவிலான திருக்கோவில் தேசத்துக்கோவிலாகும்.
அங்கு சில ஆசாரங்கள் நியமங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆடிஅமாவாசைத்திருவிழா
சிவராத்திரி பிள்ளையார் காப்பு கந்தபுராணம் படித்தல் சூரன்போர்
திருவெம்பாவை போன்ற நிகழ்வுகள் வருடாந்தம் நடைபெறுபவை.
எனினும் சூரன்போர் மற்றும் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவாறு வெகு சிறப்பாக நடைபெறும் சடங்குகளாகும்.
ஆடிஅமாவாசை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று இறுதியில் சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழமையாகும்.
இம்முறை
இத் திருவிழா 18 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ளது..எதிர்வரும் 04ம் திகதி ஆடிஅமாவாசை தினத்தன்று
தீர்த்தோற்சவம் நடைபெறும்.
வரலாறு
மட்டக்களப்பு
மான்மியக்குறிப்பின்படி சுப்பிரமணியருடைய ஆணைப்படி சூரனைக்கொன்று
வெற்றியுடன் மீண்ட வேலானது உக்கிரத்தோடு வரும் வழியில் எதிர்ப்பட்ட வாகூர
மலையை இருகூறுகளாய் பிளந்தெறிந்து கடலில் மூழ்கியபின்னர் மூன்று
கதிர்களைச் சிந்திச்சென்றதென்றும் வேலுருக்கொண்ட அக்கதிர்கள் மூன்றும்
முறையே
உகந்தை மலை உச்சியிலும்
திருக்கோவிலில் ஒரு வெள்ளை நாவல் மரத்தின் மீதும்
மண்டூரில் ஒரு தில்லைமரத்தின் மீதும்
தங்கியிருந்தன
என்றும் அவ்வவ்விடங்களில் வாழ்ந்த மக்கள்( வேடர்கள்) வியப்புடன் நோக்கி
கொத்துப் பந்தர்களால் ஆலயம் அமைத்து வழிபட்டனர் என்று கூறப்படுகிறது.
முதலிரு ஆலயங்களிலும் பார்க்க திருக்கோவில் ஆலயம் வரலாற்றோடு கூடுதல் தொடர்புடையதாயிருக்கிறது.
திருக்கோவிலில்
வேடர்களால் இலைகுழைகளைக்கொண்டு முருகனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலைத்
தமிழரின் இரண்டாம்படை எழுச்சியின்போது வந்த சோழநாட்டு மன்னர் எழுவர்
கல்லினாற்கட்டி முடித்தனரென்றும் வேடரது பந்தருக்குள் வடக்குமுகமாக
வீற்றிருந்த வேலானது புதிய கற்கோயிலுட் கிழக்கு முகமாகத் திரும்பிவிட்ட
காரணத்தினால் திருக்கோவில்(திரும்பிய கோவில்) என்று பெயரிட்டார் என்றும்
திருக்கோவில் பற்றிய பதிகம் ஒன்று கூறும்.
திருக்கோவிலின்
பழையபெயர் நாகர்முனை என்றும் கோவில் அமைக்கப்பட்ட பின்னர் அக்கோவில்
சிறப்பால் இடப்பெயரும் "திருக்கோவில்" என மாறிற்று என்றும் அறிகிறோம்.
திருக்கோவிலுள்ள கல்வெட்டுக்களும் பட்டயங்களும் அதன் வரலாற்றைத் துல்லியமாக எடுத்துக்கூறவல்லன.
வன்னிமை வரலாறு
அக் காலத்தில் கல்முனை கரவாகுபற்று தொடக்கம் பாணமை உகந்தை வரை வன்னிமை ஆட்சிக்காலம் நிலவியது.
அக்காலத்தில்
எமது பிரதேசங்களை காலத்திற்கு காலம் பல சிற்றரசர்கள்
ஆட்சிபுரிந்துள்ளார்கள். கிழக்கில் ஒவ்வொரு பிரதேசங்களையும்
ஆளுகையாகக்கொண்டு பல சிற்றரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளார்கள் என்பதற்கு
பல்வேறு சான்றுகள் இருக்கின்றன.
அந்தவகையில்
கல்முனை கரவாகுப்பற்று தொடக்கம் அன்றைய நாகர்முனை என அழைக்கப்பட்ட இன்றைய
திருக்கோவில் மற்றும் பாணமை உகந்தை வரை கல்முனையில் பழம்பெரும் கிராமமான
நற்பிட்டிமுனையை மையமாகக் கொண்டு வாழந்த இரு வன்னிமை சிற்றரசர்கள்
பரிபாலித்து வந்துள்ளனர்.
நற்பிட்டிமுனையில்
வாழ்ந்த வன்னிமை சிற்றரசர்களான சத்துருகப்போடி
சின்னத்தம்பி(பதவிக்காலம்1902), சின்னத்தம்பி
செல்லையா(பதவிக்காலம்1908இலிரு ந்து ) ஆகிய இருவருக்கும் அன்று
பிரிட்டிஸ்காரர்கள் வழங்கிய அதிகாரம் தொடர்பான நியமனம் மற்றும்
சிற்றரசர்களாக இருநது அவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் பற்றிய வரலாற்று ஆவணம்
இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகின்றது.
இவர்களின் பரம்பரையினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். ஆலயத்தை பரிபாலித்து வருகின்றனர்.
இது பாரம்பரியமாக மரபுரீதியாக நிருவாகக்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
செல்லையா வன்னிமை என்பார் சந்ததியே தலைமைப்பதவியை வகிக்ககூடியவர்கள் ஆவர். இது ஆலய யாப்பிலும் எழுதப்பட்டுள்ளது.
இங்குள்ள யாப்பு 1952ம் ஆண்டு எழுதப்பட்டவையாகும். அதற்கு முன்பு எழுதப்படாத யாப்பின் பிரகாரம் ஆலயம் நிருவகிக்கப்பட்டுவந்தது.
1952 இவ் முகாந்திரம் ச.வ.செல்லையா வன்னிமை தலைமையில் இவ் யாப்பு எழுதப்பட்டது.
அதன்படி
05 பேர் கொண்ட பஞ்சாயத்துசபை இருக்கும்.அச்சபையில் தலைவர் செயலாளர்;
கணக்குப்பிள்ளை வண்ணக்கர் மற்றும் பொருளாளர் இருப்பார்கள்.
அதில்
தலைவராக வன்னிமை பரம்பரையைச் சேர்ந்தவர் இருப்பார்.அவர் கரைவாகுப்பற்று
நற்பிட்டிமுனைப் பகுதியைச் சேர்ந்தவர்.யாப்பின்படி பெண்ணடி
வம்சவரன்முறைப்படி தெரிவாவர்.செயலாளர் மற்றும் கணக்குப்பிள்ளை ஆகியோர்
அக்கரைப்பற்றைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.வண்ணக்கர் மற்றும் பொருளாளர்
தம்பிலுவில்லைச் சேர்ந்தவராக இருப்பார்கள்.
இத்துடன் வட்டாரப்பிரதிநிதிகள் 20 பேர் இருப்பார்கள். இது நியதி.
இதேவேளை
28.12.1952 மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று
தொடரப்பட்டது.அப்போதைய நீதிபதி என்.குணவர்த்தன முன்னிலையில்
எடுத்துக்கொள்ளப்பட்டபோது
வழக்கு சமரசமாக தீர்த்துவைக்கப்பட்டது.
அதன்படி
ஆடிஅமாவாசைத் தீர்த்தம் முடிவடைந்து மறுநாள் பஞ்சாயத்துசபை தெரியவேண்டும்
எனவும் அதிலே வட்டாரப் பிரதிநிதிகளும் தெரிவாகவேண்டுமென்று
தீர்ப்பளிக்கப்பட்டது.
தலைவரானவர்
கரைவாகுப்பற்று வன்னிமையின் செல்லையா வம்சத்து வம்சவரன் முறையிலமைதல்
வேண்டும். அக்காலத்தில் செல்லையா வன்னிமை 05 ஆலயங்களை தனியாக
நிருவகித்தவந்தார்.
பாண்டிருப்பு திரௌபதை அம்மன்
ஆலயம் ,பாண்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் ,நற்பிட்டிமுனை பிள்ளையார்
ஆலயம், சேனைக்குடியிருப்பு காளி ஆலயம் மற்றும் திருக்கோவில் ஸ்ரீ
சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் என்பனவே அவை.
அதன்பின்பு காலநேரவர்த்தமான சூழலுக்கு அமைய வன்னிமை வம்சவரன் முறையில்வந்தவர்கள் இவ்வாலயங்களை பரிபாலித்துவருகின்றனர்.
1952ம் ஆண்டு யாப்பின்பிரகாரம் முதல் பஞ்சாயத்துசபை தெரிவானது.
தலைவராக முகாந்திரம் ச.வ.செல்லையா
செயலாளராக சி.மானாகப்போடி
வண்ணக்கராக ஆ.தங்கராசா
பொருளாளராக க.ஆறுமுகம்
கணக்குப்பிள்ளையாக க.கந்தையா ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்கள்.
வட்டாரப்பிரதிநிதிகள் 30 வட்டாரங்களுக்கு தெரிவாக வேண்டுமென்று நீதிமன்று கட்டளையிட்டதால் பின்வருவோர் தெரிவானார்கள்.
பாணமை-எஸ்.டி.எம்.றெட்டறாள்
பொத்தவில் - எஸ்.குணரெட்ணம் கோமாரி –கி.வ.வி.வன்னமணி தமிபிலுவில்-
என்.தம்பிராசா தம்பட்டை – கா.கு.தில்லைக்குருக்கள்
பனங்காடு-க.தோ.குருநாதபிள்ளை கோளாவில் - க.வ.வி.கந்தவனம்
அக்கரைப்பற்று-அ.பூபாலபிள்ளை பனையடிப்பிட்டி – தோ. செ.சீனித்தம்பி
நிந்தவூர்-த.பொ.த.கணபதிப்பிள்ளை
காரைதீவு-
செ.பொன்னையா சம்மாந்துறை-தெ.சிவஞானம் மல்வத்தை-சி.சி.த.செல்லத்துரை
மல்லிகைத்தீவு-நா.நாதபிள்ளை உடையார். சவளக்கடை-இ.சத்துருக்கப்போடி
மகிளுர்-தெ.பொன்னையா சாய்ந்தமருது-க.ப.சீனித்தம்பிப் போடியாhர் கல்முனை-
கு.சிவஞானம் நாற்பட்டிமுனை-க.வ.இரத்தினசிங் கம் பாண்டிருப்பு-ந.பாலிப்போடி எருவில்-சோ.உ.எதிர்மன்னசிங்கம் கோயில்போரதீவு-சா.வ.வி.சின்னவப் போடி பெரியபோரதீவு-க.வ.வி.இளையதம்பி ப்போடி
பெரியநீலாவணை-பொ.த.கனகசூரியம் வெல்லாவெளி-க.சுப்பிரமணியம் பழுகாமம்
க.காசுபதி களுதாவளை-கி.கி.த.தம்பியப்பா அம்பாறை-சி.உ.சீவரெத்தினம்
நாவற்குடா-ந.நொ.செல்லத்துரை
திருக்கோவில்;
பிரதேசத்திற்கு உறுப்பினரைத் தரிவுசெய்ய அவ்வூர்ப்பிரதிநிதிகள்
மறுத்துவிட்டனர்.காரணம் கேட்டதற்கு மகாசபையிலுள்ள காரியதரிசிப் பதவியை
திருக்கோவிலுக்குத் தரவேண்டுமெனக் கேட்டனர்.
சபையோர்
அதற்கு மறுப்புத்தெரிவிக்க வன்னிமையோ தேவையானால் உப காரியதரிசி என்ற
பதவியைத்தரலாமென்றார். அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.
அப்போது
30 வட்டாரப்பிரதிநிதிகளும் 05 பஞ்சாயத்துசபைப் பிரதிநிதிகளும் மொத்தமாக 35
பேர் அதிகாரசபையாக இயங்கிவந்தனர்.அதுவே ஆலயத்தைப் பரிபாலித்தவந்தனர்.
கூட்டம்
கூடுவதானால் 18 பேர்கொண்ட கோரம் இருகக்வேண்டும். யாப்புத் திருத்தம்
செய்யவேண்டுமெனின் மூன்றிலிரண்டு பெரம்பான்மை ஆதரவு வேண்டும்.பின்பு
இது நான்கில்மூன்று என மாற்றப்பட்டது.
பின்பு
1972 களில் தம்பிலுவில் திருக்கோவில் போட்டி மீண்டும் தலைதூக்கியது.
அவர்களுக்கு செயலாளர் பதவி வேண்டுமென்பதே அதற்கான காரணமாகும்.
இறுதியில்
அக்கரைப்பற்றுக்குரிய செயலாளர் பதவியை அவர்கள் திருக்கோவில் மக்களுக்காக
உவந்தளித்தார்கள். அதனால் திருக்கோவில் பிரச்சினை தீர்ந்தது.
அதற்காக புதிதாக உப தலைவர் பதவியொன்று உருவாக்கப்பட்டு அது அக்கரைப்பற்றுக்கு வழங்கப்பட்டது.
1972
களின் பின்னர் மகாசபையிலுள்ள செயலாளர் பதவி திருக்கோவிலுக்கு
வழங்கப்பட்டுவருகிறது.தற்போது அப்பதவியை திருக்கோவிலைச் சேர்ந்த ஓய்வுநிலை
உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் அ.செல்வராஜா அலங்கரிக்கிறார்.
அதனால்
1972க்கு பின்னர் மகாசபையானது 06 உறுப்பினர்களோடு இயங்கிவருகிறது.
வட்டாரப்பிரதிநிதிககள் 30 இலிருந்து 20 ஆகக் குறைந்துள்ளது. ஏனெனில் சில
வட்டாரங்கள் சரிவர இயங்காமல தாமாகவே தமது உறுப்புரிமையை இழந்துள்ளனர்.
எஞ்சியவர்களுக்கு திருவிழாச் செய்யும் கௌரவமும் வழங்கப்பட்டுள்ளது.
சமகால நிருவாகம்
தற்போது மகாசபை உறுப்பினர்கள் 06 பேர் வட்டாரப்பொறுப்பாளர்கள் 20 பேர். மொத்தமாக 26 பிரதிநிதிகள் ஆலயத்தைப் பரிபாலித்துவருகின்றனர்.
தற்போதுதியங்கும் புதிய நிருவாகசபை
தலைவராக சுந்தரலிங்கம் சுரேஸ் (வன்னிமை வம்சவரன் - நற்பிட்டிமுனை) வண்ணக்கராக வன்னியசிங்கம்ஜெயந்தன்(தம்பிலு வில்)செயலாளராக
அ.செல்வராஜா(திருக்கோவில்) உபதலைவராக க.சபாரெட்ணம் (அக்கரைப்பற்று)
பொருளாளராக கொ.கிருஸ்ணமூர்த்தி (தம்பிலுவில்) கணக்குப்பிள்ளையாக
இ.லோகிதராஜா(அக்கரைப்பற்று) ஆகிய அறுவரும் மகாசபை பிரதிநிதிகளாவர்.
இதைத்தவிர 20 வட்டாரப்பிரதிநிதிகள் பொத்துவில் முதல் எருவில் ஈறாகவுள்ள தமிழக்கிராமங்களைப் பிரதிபலிப்போராகவுள்ளனர்.
ஆலயவழக்கொன்று பொத்துவில் நீதிமன்றில் செல்கிறது.
ஆலய
பொக்கிச அறைக்கு மூன்று திறவுகோல்கள் இருத்தல் வேண்டும் என்றும் அவை
வண்ணக்கர் பொருளாளர் கணக்குப்பிள்ளை ஆகியோர் ஒவ்வொருவரிடமும் இருத்தல்
வேண்டும் என்று 1952ம் ஆண்டின் யாப்பு கூறுகிறது.
ஆலய
பிரதமகுருவாக பல்லாண்டுகாலம் பிரம்ஸ்ரீ. நீதிநாதக்குருக்கள்
பணியாற்றிவந்தார்.அவராது மறைவின்பின்னர் அவரது மருகர் பிரபல சிவஸ்ரீ.சண்முக
மகேஸ்வரக்குருக்கள், மகன் சிவஸ்ரீ. அங்குசநாதக் குருக்கள் போன்றோர் பூஜை
புனஸ்காரங்களை சிறப்பாக நடாத்திவருகின்றனர்.
இறந்தோர்க்கான
பிதிர்கடன் செலுத்துதலுக்கு உகந்த திருக்கோவில் ஆடிஅமாவாசைத் தீர்த்தமானது
கிழக்கு மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதேபோன்று
பிதிர்கடன் செலுத்துதலுக்கு (கிழக்கில்)மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்
பிள்ளையாரின் தலமும், ஆடி அமாவாசைத் தீர்த்தமும் முக்கியத்துவம்
பெறுகின்றது.
பிதிர்க்கடன் செலுத்துவோர் இத்தகைய ஆலயங்களை நாடி தமது கடன்களை நிறைவேற்றி வருவதும் பாரம்பரிய நடைமுறையே.
எனவே இத்தகைய சிறப்பு பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமியின் அருள் பெற்று வாழ்வில் உய்வோமாக!!!
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்
Post A Comment:
0 comments so far,add yours