இவ் உப தபால் நிலையமானது 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 75 வருடகாலமாக தபால் சேவையினை வழங்கிவந்த நிலையில் இந்த தபாலகத்திற்கு உபதபால் அதிபர் ஒருவர் இல்லாத காரணத்தினால் 2024.06.24 தொடக்கம் சவளக்கடை உப தபால் நிலையத்திற்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருப்பதனால் அப்பிரதேசமக்கள் தபால் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்காக மிகநீண்டதூரம் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது
குறிப்பாக இவ் தபால் நிலையத்தின் மூலம் நாவிதன்வெளி, அன்னமலை, குடியிருப்புமுனை, காரைக்குடா மற்றும் கல்லோயாக்குடியேற்றக் கிராமங்களான வேப்பையடி, 7 ஆம் கிராமம் ,15 ஆம் கிராமம் ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் இவ் தபால் நிலையத்தின் மூலம் சேவைகளைப் பெற்றுவந்த நிலையில் சவளக்கடைக்கு மாற்றப்பட்டதுடன் வாரத்தில் 2 நாட்கள் மாத்திரம் இத்தபாலகம் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை பொதுசன ஓய்வூதியக் கொடுப்பவு 250 ரூபாய் பெற்றுக்கொள்வதற்காக சவளக்கடை உபதபாலகத்திற்கு போக்குவரத்துக்காக 500 ரூபாய் கொடுத்துச் செல்லவேண்டிய நிலை உருவாகி இருப்பதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போக்குவரத்து வசதியற்ற இக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நாவிதன்வெளியில் உப தபால் நிலையம் இல்லாததனால்; அஞ்சல்சேவையினைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்
இது தொடர்பாக நாவிதன்வெளி கிராமஅபிவிருத்திச்சங்கத்திநூடாக தபால்மா அதிபர் கிழக்குமாகாண பிரதித்தபால்மாஅதிபர் கல்முனை பிரதமஅஞ்சல் அதிபர் நாவிதன்வெளிப் பிரதேசசெயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு விரைவாக உப தபால் அதிபர் ஒருவரைநியமித்து வழமைபோன்று தபால் சேவையினைப் பெற்றுக்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
Post A Comment:
0 comments so far,add yours