கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு திருப்பழுகாமம் பதியில் எழுந்தருளி அருளாட்சி புரியும் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர்(சிவன்) ஆலய மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 30.08.2024 அன்று இடம்பெறும்.
மஹா கும்பாபிஷேகக் கிரியைகள் என்பது
ஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்கினியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் இறைவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும் கல்லிலும் இறைவனை ஆவாஹித்து வழிபடுவதைக் காணலாம்.
ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று, ‘ கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்று ஞானசம்பந்தப்பெருமான் சொல்வது போல் உரிய வேதாகமப் பிரகாரம் எரியோம்பும் வழிபாடு நடக்கிறது. அங்கிருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின்அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பரிஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்ப அபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது.
எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை அர்ச்சக ஸ்வாமியானவர் மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம்.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தையும் நான்கு வகையாக வகைப்படுத்திப் பேசும். ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் என்பனவேயாகும்.
ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது அநாவர்த்தனம். முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது ஆவர்த்தனம். ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது அந்தரிதம் ஆகும்.
பூஜை, உற்சவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப்பெறும் கும்பாபிஷேகம் சம்பிரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம். பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் அறிந்திருக்கக்கூடியதாகவுள்ளது.
பூரணமான மஹாகும்பாபிஷேகம் ஐம்பத்தைந்து கிரியைகளைக் கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இத்தகு பாரிய முயற்சியாகிய கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு (பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும்.
அந்தவகையில் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 28.08.2024(புதன்கிழமை) கர்மாரம்பத்துடன் எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வானது 29.08.2024 அன்று இடம்பெறுவதுடன் மஹாகும்பாபிஷேகமானது 30.08.2024 அன்று இடம்பெறும்.உற்சவ காலங்களில் ஆசார சீலர்களாகா ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் திருவருளைப் பெற்றேகுமாறு திருப்பழுகாமம் ஸ்ரீ சிவன் ஆலய அறங்காவலர் சபையினரும்,திருப்பணிச் சபையினரும் கேட்டுக்கொள்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours