எமது நாட்டிலே எங்;களுடைய பிரச்சனைகளை எதிர்காலத்தில் எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்; செயற்படுகின்றவர்களின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் எமது அரசியற் பயணம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் எமது தலைவர்கள் முன்னெடுக்கின்ற அரசியல் பணியும், எமது புலம்பெயர் தேசத்திலே இருக்கின்ற உறவுகளின் செயற்பாடும் ஒருமித்ததாக இருக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
புலம்பெயர் தேசத்து உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசங்களிலே இனி எவரும் இடம்பெயராதா வகையில், இறங்குவரிசையில் சென்று கொண்டிருக்கும் எமது இன விகிதாசாரத்தினை உயர்த்தும் வகையிலும், இந்த மண்ணிலேயே எமது இளைஞர்களும், யுவதிகளும் தொழில் செய்யக் கூடிய வகையிலும் தொழில் பேட்டைகளை உருவாக்குங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அக்கறைப்பற்று இந்து இளைஞர் மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சுவிற்சர்லாந்து பாவலர்மணி திருமதி சரளா விமலராசா அவர்களின் மரபுக் கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் 83இன் பிற்பாடு இங்கிருந்து புலம்பெயர்ந்து அந்த நாட்டில் எமது இனத்தின் கலை கலாசார பெருமையை வெளிக்கொணரும் எழுத்தாளர்களாக, சட்ட வல்லுனர்களாக, அரசியல் பிரமுகர்களாகப் பிரகாசித்து எமக்கான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே தமிழர்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டார்கள், திட்டமிட்டு கருவறுக்கப்பட்டார்கள் என்கின்ற விடயத்திற்கெல்லாம் விடை காணமுடியாதவர்களாக இருக்கின்றோம். அவ்வாறான நிலையில் இந்த மண்ணிலே தமிழர்கள் நிலையாக வாழக்கூடிய வகையிலே புலம்பெயர் தேசத்திலுள்ள உறவுகள் செயற்பட வேண்டும்.
இலங்கைத் தீவிலே வடக்கும் கிழக்கும் சேர்த்து சுமார் பதினேழு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்காளர்கள் இருக்கின்றோம். அதே போன்று புலம்பெயர் தேசத்திலும் சுமார் இருபது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றார்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுடைய கலை கலாச்சாரம், இருப்பு, தொழில்வாய்ப்பு என்ற அடிப்படையில் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்னும் முடிவுறாத வகையில் அதற்குத் தீர்வு என்ற அடிப்படையில் எமது தலைவர்கள் முன்னெடுக்கின்ற அரசியல் பணியும், எமது புலம்பெயர் தேசத்திலே இருக்கின்ற உறவுகளின் செயற்பாடும் ஒருமித்ததாக இருக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது.
2009ம் ஆண்டுக்கு முன்னர் நாம் பெரும் பலமாக இருந்தோம். ஒரு தீர்வு கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனால் 2009இன் பின்னர் தமிழர்களுக்கான தீர்வைத் தருவதற்கு எந்த சிங்களத் தலைவர்களும் கவனிப்பதாக இல்லை. ஆனால் நாங்கள் இன்னும் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் எங்கள் உறவுகள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாது எமது நாட்டிலே எங்களுடைய பிரச்சனைகளை எதிர்காலத்தில் எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்; செயற்படுகின்றவர்களின் மீதும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் எமது அரசியற் பயணம் சென்று கொண்டிருக்கின்றது.
எனவே இந்த ஒற்றுமை என்ற விடயத்தில் நாங்கள் தவறிப் போவோமாக இருந்தால் எதிர்காலத்தில் இந்த அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்களாம் என்ற ஒரு நிலைமையே தோன்றுமே தவிர வாழ்கின்றார்கள் என்ற நிலை மாறி விடும். 8191ம் ஆண்டு 22 வீதமாக இருந்த தமிழர்கள் இன்று 17 வீதமாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். நாளாந்தம் இந்த நாட்டில் இருந்து இடம்பெயரும் தமிழர்களின் வீதம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இங்கு நிலையாக வாழவேண்டுமானால் இங்கு நிலையான தொழில் பேட்டைகள் அமைக்க வேண்டிய பாரிய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.
நாங்கள் புலம்பெயர் தேசத்தில் இருக்கும் அன்பான உறவுகளிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைக்கின்றோம். புலம்பெயர் தேசத்து உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசங்களிலே இனி எவரும் இடம்பெயராதா வகையில், இறங்குவரிசையில் சென்று கொண்டிருக்கும் எமது இன விகிதாசாரத்தினை உயர்த்தும் வகையிலும், இந்த மண்ணின் இருப்புக்காகப் போராடிய ஒரு இனம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த மண்ணை விட்டு அகன்று கொண்டிருக்கின்றது. எதிர்காலத்தில் எமது இனம் இங்கு வாழுமா என்ற கேள்வியும் எழுகின்றது. அதற்காக இந்த மண்ணிலேயே எமது இளைஞர்களும், யுவதிகளும் தொழில் செய்யக் கூடிய வகையிலும் தொழில் பேட்டைகளை உருவாக்குங்கள்.
இதனை ஏற்படுத்தி எமது தமிழர்களைப் பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக வளர்ப்பதனூடாகவே இந்த மண்ணிலே தமிழர்களை நிலை நிறுத்த முடியும். இல்லாவிட்டால் என்னுடைய இருபது வருட அரசியற் பயண அனுபவத்தின்படி எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற மனச் சோர்வு எமது மக்கள் மத்தியிலே ஏற்பட்டுவிட்டது. அதற்குத் தீர்வு காண புலம்பெயர் உறவுகள் கவனமெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours