(  வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு வரலாற்றில் முதல் தடவையாக
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் கன்னித் தேரோட்டம் இன்று (7)  சனிக்கிழமை பகல் 12 மணியளவில் விநாயகர் சதுர்த்தியன்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வரலாற்றில் முதல் தடவையாக 39 லட்சரூபாவில் 21 அடி உயர பாரிய  சித்திரத்தேர்  ஒன்று ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுவே காரைதீவு வரலாற்றில் முதலாவது சித்திரத்தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பகல் 12 மணியளவில் ஆலய வெளிவீதி பிரகாரத்தில் கன்னித் தேரோட்டம் இடம் பெற்றது .
பெருந்திரளான ஆண் பெண் பக்தர்கள் வடம் பிடிக்க அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க ஆலய பிரகாரத்தில் கன்னித் தேரோட்டம் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

முன்னதாக தேரை வழங்கிய அமரர் சண்முகரெத்தினம் குருக்கள் குடும்பத்தை நன்றி கூறும் கௌரவிக்கும் நிகழ்வு ஆலயத் தலைவர் இ.தவராசா தலைமையில் ஆலயசந்தானத்துபிரதிநிதி விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.

அதன் போது இத்தேரை குடும்பம் சார்பாக கையளித்த மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டார் .
"விநாயக பக்தி கிரியாசாகரர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அக்கரை மித்திரன் யாத்த  வாழ்த்துப்பாவை வி.ரி.சகாதேவராஜா வாசித்து கையளித்தார்.


 இவ் ஆலயத்தின் முன்னாள் பிரதம குரு யாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலை கற்பகப்பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா அமரர் சிவஸ்ரீ இரத்தினசபாபதி சண்முகரெத்தினம் குருக்கள் வடிவாம்பிகை குடும்பம் சார்பாக இந்த அற்புதமான ஆன்மீக அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது . 

அமரர் சிவஸ்ரீ சண்முகரெத்தினம் குருக்கள் இவ்வாலயத்தில் பல வருடகாலம் பிரதம குருக்களாக இருந்து நிறைந்த சேவையாற்றியவர். அவரது சிரேஸ்ட புதல்வர்  வடக்கு கிழக்கில் மிகவும் பிரபலமான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தற்போது இவ் ஆலயத்தின் பிரதம குருவாக இருக்கிறார் . அவர் தற்சமயம் கனடாவில் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தில் பிரதம குருவாக செயற்படுகிறார். அக்டோபர் 1 இல் நாடு திரும்புவார்.

குறித்த சித்திரத்தேரின் வெள்ளோட்டம் நேற்றுமுன்தினம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பெருந்திரளான பக்தர்கள் வடம் பிடிக்க அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க ஆலய பிரகாரத்தில்  நகர்ந்தது.

அச்சமயம் இந்த சித்திரத்தேரை வடிவமைத்த யாழ்ப்பாணம் கைதடி தச்சன்தோப்பைச் சேர்ந்த சிற்பாச்சாரி சுப்பிரமணியம் அஜந்தன் குழுவினர் தேரிலேற்றி வெள்ளோட்டம் விடப்பட்டது. அவருக்கு  சிற்பக்கலையரசன் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குருக்கள் குடும்பத்தினர் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.

இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours