காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்திற்கான சித்திரத்தேரை வடித்த சிற்பாச்சாரி அஜந்தனுக்கு "சிற்பக் கலையரசன்" விருதும் குறித்த 
தேரை அன்பளித்த மகோற்சவகுரு சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்களுக்கு "விநாயக பக்தி கிரியாசாகரர்" விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு வரலாற்றில் முதல் தடவையாக
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் முதலாவது சித்திரத் தேரின் கன்னித் தேரோட்டம் கடந்த (7)  சனிக்கிழமை பகல் 12 மணியளவில் விநாயகர் சதுர்த்தியன்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றமை தெரிந்ததே.

இதுவே காரைதீவு வரலாற்றில் முதலாவது சித்திரத்தேர் என்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்றில் முதல் தடவையாக 39 லட்சரூபாவில் 21 அடி உயர பாரிய  சித்திரத்தேர்  ஒன்று ஆலயத்திற்கு அன்பளிப்பு செய்த அமரர் சண்முகரெத்தினம் குருக்கள் குடும்பத்தை நன்றி கூறும் கௌரவிக்கும் நிகழ்வு ஆலயத் தலைவர் இ.தவராசா தலைமையில் ஆலயசந்தானத்துபிரதிநிதி விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

அதன் போது இத்தேரை குடும்பம் சார்பாக கையளித்த மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டார் .
"விநாயக பக்தி கிரியாசாகரர்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  வாழ்த்துப்பாவை வி.ரி.சகாதேவராஜா வாசித்து பரிபாலன சபையினர் கையளித்தனர்.

 இவ் ஆலயத்தின் முன்னாள் பிரதம குரு யாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலை கற்பகப்பிள்ளையார் ஆலய ஆதீனகர்த்தா அமரர் சிவஸ்ரீ இரத்தினசபாபதி சண்முகரெத்தினம் குருக்கள் வடிவாம்பிகை குடும்பம் சார்பாக இந்த அற்புதமான ஆன்மீக அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது . அமரர் சிவஸ்ரீ சண்முகரெத்தினம் குருக்கள் இவ்வாலயத்தில் பல வருடகாலம் பிரதம குருக்களாக இருந்து நிறைந்த சேவையாற்றியவர். அவரது சிரேஸ்ட புதல்வர்  வடக்கு கிழக்கில் மிகவும் பிரபலமான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தற்போது இவ் ஆலயத்தின் பிரதம குருவாக இருக்கிறார் . அவர் தற்சமயம் கனடாவில் பிள்ளையார் ஆலய மகோற்சவத்தில் பிரதம குருவாக செயற்படுகிறார். அக்டோபர் 1 இல் நாடு திரும்புவார்.

அதேசமயம் இந்த சித்திரத்தேரை வடிவமைத்த யாழ்ப்பாணம் கைதடி தச்சன்தோப்பைச் சேர்ந்த சிற்பாச்சாரி சுப்பிரமணியம் அஜந்தனுக்கு  "சிற்பக்கலையரசன்" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குருக்கள்தர்மகர்த்தா க.சுபரெத்தினம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
 குடும்பத்தினர் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் பொன்னாடை போர்த்தி தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர் 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours