( வி.ரி. சகாதேவராஜா)

பொத்துவில் கோமாரி பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கைக்கு வனபரிபாலனத் திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் சுமார் 600 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டின் கீழ் விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

 இதனால் பொத்துவில் கோமாரி காட்டுமடு டிப்போமடு பூனாப்பொக்கணி போன்ற பிரதேசங்களில் மிளகாய் வெண்டை கத்தரி தக்காளி சோளம் போன்ற சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சுமார் 400 தமிழ் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக சமகால மழையில் உழவி பயிர்ச்செய்கையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த காணி விடுவிப்பை மேற்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் உறுதுணையாக இருந்த பொதுமக்கள் பாதுகாப்பு சபையின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கும்  இவ்விவகாரத்தில் முன்னின்று செயற்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் உப முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான பெருமாள் பார்த்திபன் நன்றி தெரிவித்தார்.

அவர் கூறுகையில்..
குறித்த பிரதேசங்களில் வழமையாக சேனைப் பயிர்ச்செய்கை நடைபெற்று வருவதுண்டு.
ஆனால் இம்முறை அதனை பொத்துவில் பிரதேச செயலகம் முறையாக அடையாளப்படுத்தாத காரணத்தினால் வனபரிபாலனத் திணைக்களம் இம்முறை  தடை விதித்திருந்தது. கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் தலையில் கை வைத்துக் கொண்டு மிகவும் விரக்தியில் வேதனையுடன் இருந்தனர்.
இதனை  நான் வெள்ளிக்கிழமை மாலை இலங்கை 
பொதுமக்கள் பாதுகாப்பு செயல் அணியின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு உரிய ஆதாரத்துடன் முறையிட்டேன்.
 மறுநாளே அதற்குரிய விடுவிப்புக் கட்டளை வந்தது.
 
 பொதுமக்கள் பாதுகாப்பு சபையின் செயலாளர் ரவி செனவிரத்ன நேரடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இந்த காணிகள் ஏழை தமிழ் விவசாயிகளுக்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றது .அதனால் அந்த விவசாயிகள் நேற்று முதல் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்காக அங்கு சென்று உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். என்றார்.

அவர் மேலும் கூறுகையில்...

குறித்த சேனைப் பயிர்ச்செய்கைக்கான உரிய காணிகள் அந்தந்த காலத்தில் பயிர்ச்செய்கைக்காக பிரதேச செயலகத்தின் அடையாளம் கண்டு தெரிவித்ததும் வனபரிபாலனத் திணைக்களம் விடுவிப்பது வழக்கம்.

 ஆனால் இம்முறை பொத்துவில் பிரதேச செயலகம்  இந்தக் காணிகளை உரிய வேளையில் அடையாளப்படுத்தலை செய்யாத காரணத்தினால் வனபரிபாலனத் திணைக்களம் பயிர்ச்செய்கைக்கு தடைவிதித்திருந்தது .

இதனால் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்தும் தனது ஒரு வருட ஜீவனோபாயத்திற்கான வருவாயைப் பெறமுடியாது திண்டாடிக் கொண்டிருந்தனர்.இவ் வேளையில்தான் நான் இயங்கினேன். வெற்றி கிடைத்தது. நன்றிகள். என்றார்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours