அரசினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.

குறித்த விலை குறைப்பினை தொடர்ந்து மட்டக்களப்பில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினமே விலை குறையவுள்ளதை அறிந்து கொண்ட எரிபொருள் நிறப்பு நிலைய உரிமையாளர்கள் சிலர் எரிபொருளை பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே மீண்டும் எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிறப்பு நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் காணப்பட்டதனால் மட்டக்களப்பு நகர் பகுதிக்கு வருகை தரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இந்நிலை ஏற்பட கூடாது என்பதை கருத்திற் கொண்ட மட்டக்களப்பு ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிறப்பு நிலையத்தின் உரிமையாளரும் வர்த்தக சங்க தலைவருமாகிய தேசபந்து மா.செல்வராசா போதியளவு எரிபொருளை ஏற்கனவே இருப்பில் வைத்திருந்து இன்று அனைவருக்கும் எரிபொருளை குறைக்கப்பட்ட விலைக்கே வழங்கியுள்ளார்.

அதே வேளை தனக்கு சுமார் 6 இலட்சம் நஸ்டம் ஏற்பட்ட போதிலும் காலை வேளையில் தொழில்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தம்மால் எரிபொருள் வழங்க முடிந்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக தேசபந்து மா.செல்வராசா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நாட்டில்  எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய வேளை எரிபொருளுக்கான விலை அதிகரித்திருந்த போதும் குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் பழைய விலைக்கே தம்மிடமிருந்த எரிபொருளை விநியோகித்திருந்தார்.

விலை குறைப்பின்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 283 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 319 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 183 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதே வேளை மாவட்டத்தில் உள்ள சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம் பெற்ற போதிலும் புதிய விலையிலேயே விநியோகிக்கப்பட்டுள்ளது.






Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours