பாறுக் ஷிஹான்


மீன் பிடிப்பதற்காக சென்ற  பெண்ணை தேடுவதற்காக பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மீன் பிடிப்பதற்காக சென்ற  பெண்ணை  முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று  திங்கட்கிழமை (14)  மாலை  பதிவாகி இருந்தது.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை  அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  பெண்ணையே  முதலை இழுத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் திருமணமாகாத  பெண்ணை  முதலை இவ்வாறு  இழுத்துச் சென்றுள்ளதுடன் இதுவரை அப்பெண்ணோ அல்லது சடலமோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணின் சடலத்தை மீட்பதற்காக சவளக்கடை பொலிஸாருடன் இணைந்து கல்முனை கடற்படையினரின் படகும் சுழியோடிகளும் ஈடுபட்டுள்ளனர்.இது தவிர பொதுமக்களும் இந்நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்  மழை காரணமாக ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது . காரைதீவு  – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்  இவைகளும் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள் அபாயகரமான பிரதேசங்களில் குறித்த பிரதேச சபைகள் சுற்றுச் சூழல் அதிகாரிகள் வன பரிபாலன சபையினர் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours