மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுற்றுச்சூழல் மற்றும் அதனை அண்டியுள்ள வாய்க்கால் என்பன சிரமதானம் ஊடாக துப்புரவு செய்யப்பட்டு வருகிறது. குறித்த வீட்டுத்திட்ட சுற்றுச்சூழலிலும் அங்குள்ள வாய்க்கால்களிலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த செயற்பாட்டினை தடுக்கும் பொருட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.


அந்த வகையில் பிராந்திய பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி எஸ்.எப்.இசட்.சராப்டீன் அவர்களினால் சிரமதான நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், கல்முனை பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் குறித்த சிரமதானப் பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட சுகாதார கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அங்குள்ளவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அதனை முறையாக மேற்கொள்வதற்குரிய பேக் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சிரமதான நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத்  உள்ளிட்டவர்களுடன் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours