( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் மீண்டும் இழக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

1994 மற்றும் 2020 களில் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றுமை இன்மையால் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை தெரிந்ததே.

இம் முறையும் அதே போன்றதொரு துர்ப்பாக்கிய நிலை உருவாகக் கூடிய களநிலவரம் ஒன்று தென்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது சமூகமாகவுள்ள தமிழர்கள் ஒரு குடையின் கீழ் போட்டியிட வேண்டும். இன்றேல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு பிரதிநிதித்தும் இழக்கப்படும் என்று பொதுக் கட்டமைப்பு உட்பட பல சமூக ஆர்வலர்களும் உரத்த குரலில் கருத்தை தெரிவித்துள்ளார் வைத்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஆறு தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஓரணியில் போட்டியிடுவதென வியாழக்கிழமை இரவு காரைதீவில் இடம் பெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும் 24 மணிநேரத்துள் இலங்கை தமிழரசுக் கட்சி தனிவழி போக தீர்மானித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தங்கள் தலைமையில் ஓரணியில் ஒன்றுசேருமாறு கோரி வேட்புமனு விண்ணப்ப படிவத்தை பெற்றுள்ளது.

இந் நிலையில் ஏனைய கட்சிகளும் தனிவழி போனால் சுமார் எட்டு அணிகள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது நிச்சயமாக பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் என்பதை அனைவரும் அறிவர்.
பிரதிநிதித்துவம் தான் குறிக்கோள் என்றால் அனைவரும் இதயசுத்தியுடன் ஒரு அணியில் போட்டியிடுமாறு அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் இறுதி நேர கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours