!

( வி.ரி. சகாதேவராஜா)


2004 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது மண்ணின் மைந்தன் கனகசபை பத்மநாதன் எமது காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பாராளுமன்ற உறுப்பினரானார்.
20 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் காரைதீவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக எமது மண்ணின் மைந்தன் ஆளுமையுள்ள முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவாகவுள்ளார்.
இதனை இத் தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு விழா கட்டியம் கூறி நிற்கின்றது.

இவ்வாறு இலங்கைத் தமிழரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் தேர்தல் பிரச்சார காரியாலயம் காரைதீவில் திறந்து வைத்தவேளை உரையாற்றியவர்கள் தெரிவித்தார்கள்.

இலங்கைத் தமிழரசு கட்சியில் திகாமடுல்ல தேர்தல் தொகுதி வீட்டு சின்னம்  இலக்கம் 5ல் போட்டியிடும் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் தேர்தல் பிரச்சார காரியாலயம் நேற்று  (10/11/2024) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவு பிரதான வீதியில்  வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச உப தலைவரும் முன்னாள் உப  தவிசாளருமான கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி தலைமையில் இத் திறப்பு விழா மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

 இதில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா ஆரம்பமாகமுதலே தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசாரின் பிரசன்னம் கெடுபிடிகள் இருந்தன.

மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்தும் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதான வீதி என்பதால் ஒலிபெருக்கி பாவிக்க வேண்டாம், பிரச்சாரம் பேச்சு வேண்டாம் எனப் பொலிசார் அறிவுறுத்தினர்.
கூட்டம் முடியும் வரை பொலிசார் நின்றிருந்தனர்.

பதாதையில் பொறிக்கப்பட்ட தந்தை செல்வா தேர்தல் கேட்கவில்லை.எனவே அவரது முகத்தை மறையுங்கள் என்று அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

அத்தனையையும் தாண்டி இத்திறப்பு விழா வெற்றி கரமாக நடைபெற்று முடிந்தது.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் க.தட்சணாமூர்த்தி, உறுப்பினர்களான த.மோகனதாஸ், எஸ்.சசிக்குமார், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகார அம்பாறை மாவட்ட தலைவி செல்வராணி( தம்பிலுவில்), ஓய்வு நிலை கிராம சேவையாளர்களான  அ.நல்லரெத்தினம்( திராய்க்கேணி) க.பாக்கியராசா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours