மட்டக்களப்பில் தனக்கு இழந்துள்ள ஆதரவை சரி செய்வதற்கு இங்கு சிலரை வைத்து தேசியப்பட்டியல் ஆசை காட்டி வாக்குகளைச் சிதறடிப்பதே பிள்ளையானின் நோக்கம். அதற்கு இந்த மாவட்டத்தில் சிலரும் புத்தியற்று வேலை செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது. அம்பாறை மாவட்டத்திலே இம்முறை இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு ஆசனம் பெறுவது உறுதி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தவராசா கலைஅரசன் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி அன்னமலை 2 இல் அமைந்துள்ள  பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்இ

எமது அம்பறை மாவட்டத்திலே மூவினங்களும் வாழ்கின்றன. இங்கு மற்றைய சகோதர இனங்கள் என்ன தவறினை விட்டாலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் வாக்குப் பலம் இருக்கின்றது. ஆனால் தமிழர்களைப் பொருத்தமட்டில் நாங்கள் ஒருமித்து தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்காது விட்டால் எங்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக் கூடிய சாத்தியங்களே உண்டு. அந்த அடிப்படையிலேதான் நாங்கள் கிராமம் கிராமமாகச் சென்று தமிழ் மக்கள் தமிழர்களின் சின்னமான தமிழரசின் சின்னமான வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்ற விடயத்தை வலியுறுத்தி வருகின்றோம்.

எமது நாவிதன்வெளி பிரதேசத்தைப் பொருத்த மட்டில் 2008ம் ஆண்டு நான் தவிசாளர் ஆனதன் பிற்பாடு சுமார் 36 வீதிகள் தார் வீதிகளாச் செப்பனிடப்பட்டன. அதேபோன்று 2011ம் ஆண்டும் நான் மீண்டும் உங்கள் வாக்கினால் தாவிசாளர் ஆன போதும் பல அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறு அபிவிருத்திகள் பல செய்த போதும் தற்காலத்தில் வந்து இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இங்கு வந்து இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி இல்லை என்கிறார். கிழக்கு மாகாண முதலைமைச்சராக இருக்கும் போதும் சரிஇ தற்போது இராஜாங்க அமைச்சராக இருந்த போதும் சரி சந்திரகாந்தன் எனும் பிள்ளையானால் இந்தப் பிரதேசத்திலே மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை சொல்ல முடியுமா?

நான் 2011ம் ஆண்டு பிரதேச சபை தவிசாளராக இருந்த போது இங்குள்ள வைத்தியசாலையைத் தரமுயர்த்தித் தருமாறு கூறியபோது என்னைத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணையும் படி கூறினார். நான் சொன்னேன் உங்களைப் போன்று நான் கட்சி மாற மாட்டேன் எனது மூச்சு இருக்கும் வரையில் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையிலேயே செயற்படுவேன் என்று கூறியிருந்தேன்.

அவ்வாறு இந்தப் பிரதேசத்தைப் புறந்தள்ளிய பிள்ளையான் இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சதமேனும் நிதியுதவி செய்யாத பிள்ளையான் இன்று வந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.நாம் எமது மண்ணை மதித்து அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். இது மிகவும் புனிதமான மண் எமது கட்சியும் மிகப் புனிதமானது. எமது கட்சியில் ஆசனம் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சிதாவியவர்களுக்கு ஆசனங்களைக் கொடுத்து எமது கட்சிக்கு எதிராகச் செயற்பட வைத்துள்ளனர். இதற்கெல்லாம் நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அம்பாறை மாவட்டத்திலே திருக்கோவிலில் இன்னுமொரு கல்வி வலயம் மற்றும் நாவிதன்வெளி கல்முனையுடன் இணைந்ததாக 48 பாடசாலைகளை உள்ளடக்கிய கல்வி வலயமொன்றினை உருவாக்குவதற்கான திட்ட முன்மொழிவினை மாகாணசபைக்கு வழங்கியிருந்தேன். அது மாகாணசபையில் அங்கீகரிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தில் அனுமதிப்பதற்காக ஒரு கூட்டமும் நடைபெற்றது. இது தொடர்பில் ஆதரவு வழங்குமாறு வியாளேந்திரன் மற்றும் பிள்ளையானிடம் தெரிவித்தேன். அதற்கு பிள்ளையான் தமிழரசுக் கட்சியினர் இவ்வாறுதான் நடக்க முடியாத பிரச்சனைகளைக் கொண்டுவந்து சண்டையிடுவார்கள் இதனை விட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். அவ்வாறு இந்த மாவட்ட விடயங்களில் அக்கறையற்ற ஒருவருக்கு வாக்களிப்பதற்கு எமது மக்கள் தயாராக இருப்பார்களாயின் அதைவிட வெட்கமான செயல் எதுவுமில்லை.

2008ம் ஆண்டு நான் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக வந்த போது இப்பிரதேசம் குடியேற்றப்பட்ட பிரதேசமாகவே இருந்தது. இங்கு ஒரு அபிவிருத்தி விடயங்களும் இடம்பெறவில்லை. நான் தைரியமாகச் சொல்வேன் இங்கு ஏராளமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இந்த அண்ணமலை பொது விளையாட்டு மைதான அரங்கம் கூட எமது அபிவிருத்திப் பணிகளில் ஒன்றுதான். 

அவ்வாறு எங்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட அரங்கில் வைத்து இந்தக் கலையரசனை மோசமாகப் பேசியபோது எமது பிரதேச இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்ததுதான் மிகவும் வேதனையாக இருந்தது. இந்த மைதானத்திலே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியூடாக சுமார் 50 இலட்சம் மெறுமதியான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல நான் பிரதேச சபைத் தலைவராக வந்த பின்னர் 1952ன் பின் புனரமைப்பே காணப்படாமல் இருந்த வாய்க்கால் புனரமைக்கப்பட்டு இன்னும் அதிகதூரம் வெட்டப்பட்டு இன்று குடியிருப்புமனை வரைக்கும் விவசாயம் செய்யப்படுகின்றதே அந்த விடயங்களையும் எமது பிரதேச இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை.

முஸ்லீம் அமைச்சர்கள் தமிழ்ப் பிரதேசங்களைப் புறக்கணித்து குடிநீர்த் திட்டங்களை அமுல்ப்படுத்தினார்கள். எமது மக்களுக்கு அந்த குடிநீர்த் திட்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல அமைச்சர்களைச் சந்தித்து எமது பிரதேசத்திற்கும் அந்தக் குடிநீர்த் திட்டத்தை அமுல்ப்படுத்தினேனே அதற்காகத்தானா அந்த இளைஞர்கள் கைதட்டினார்கள்?

எங்கள் கட்சியூடாக நன்மை பெற்றவர்களே இன்று எமது கட்சிக்குத் துரோகம் செய்கின்றார்கள். நாங்கள் உதவி செய்தவர்களே எங்களைத் தோற்கடிக்க முனைகின்றார்கள். இது ஒருபோது நடக்காது. இங்கு சிலருக்குத் தேசியப்பட்டியல் பைத்தியம் பிடித்திருக்கின்றது. மட்டக்களப்பில் தனக்கு இழந்துள்ள ஆதரவை சரி செய்வதற்காக இங்கு சிலரை வைத்து தேசியப்பட்டியல் ஆசை காட்டி வாக்குகளைச் சிதறடிப்பதே அவர்களின் நோக்கம். நாட்டின் நிலமை தெரியாமல் அந்தச் சிலரும் புத்தியற்று அவர்களுக்கு வேலை செய்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது. இம்முறை இலங்கை தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்திலே ஒரு ஆசனம் பெறுவது உறுதி. நாங்களே எமது பிரதேசத்தை வளப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours