(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் பரகஹதெனிய  ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் அப்பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களின்‌ ஒத்துழைப்பில் (03) இன்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

இச்செயலமர்வில் சுமார் 200 பள்ளிவாசல்களின்‌ 600 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் அறிமுகம், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டமும் எதிர்கால செயற்பாடுகளும், குர்ஆன் மத்ரஸா அறிமுகமும் அதன் முக்கியத்துவம் ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் நடாத்தினார். இக் கருத்தரங்கில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக வளவாளர்களாக அதன் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹ்மத், என். நிலோபர், வக்பு பிரிவின் அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ. முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் எம்.என்.எம். ரோஸன், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பொறுப்பதிகாரி அஷ்ஷேக் ஏ.எம்.ரிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவத்தகம பிரதேச செயலாளர் எம்.எஸ். ஜானக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கருத்தரங்கை குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அஷ்ஷேக் ரீ.இஹ்ஸான் மரிக்கார், அஷ்ஷேக் எம்.எம். ஐயூப், எம்.என்.எம். சாஜித்,  திருமதி எம்.எச்.ஐ. சப்மா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதான காரியாலய வக்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம். மிஸார் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச் செயலமர்வை எதிர்வரும் காலங்களில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours