மாளிகைக்காடு செய்தியாளர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 2023 (2024) க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள், சாதாரண தர பரீட்சைகளில் அதி விசேட சித்திபெற்ற 9A, 8A,B, 8A,C மாணவிகள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய, சர்வதேச ரீதியாக திறமைகளை வெளிப்படுத்திய மகத்தான  மாணவிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹத்துல் நஜீம், கௌரவ அதிதியாக இக்கல்லூரியின் முதல் வைத்திய கலாநிதி திருமதி. மர்சுக்கா உவைஸ், விசேட அதிதிகளாக கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல். றியால், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி. எம்.எம். மலிக் அஸ்மா ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு விடிவெள்ளியாக திகழும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 54 ஆண்டுகள் வரலாற்றில் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின்  கல்வி எழுச்சி, விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அகில இலங்கையில் பெயர் பெற்று விளங்கும் இக்கல்லூரிக்கு நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து முஸ்லிம் பெண் மாணவிகள் இக்கல்லூரியை நாடி வந்து கல்வி கற்று சர்வதேச ரீதியில் புகழ்பெற்று வருகின்றன.

இக்கல்லூரியானது 1971ல் ஆரம்பித்த போதிலும், கடந்த காலங்களை விட 2023ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகமான மாணவிகள் க.பொ.த. சாதாரண தரத்தில் அதிகமான விசேட சித்திகளைப் பெற்று வரலாற்று சாதனை பெற்றதுடன் உயர்தரம் கற்பதற்கு தெரிவாகியமையும் க.பொ.த. உயர்தரத்தில் கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அதிகளவான உயர் சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லவும் வாய்ப்புகள் கிடைத்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.

2023 (2024)ம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயிரியல் விஞ்ஞான பீடத்துக்கு தெரிவான (34) மாணவிகள், பிரயோக விஞ்ஞான தெரிவான (05) மாணவிகள், உயிர் முறைமை தொழினுட்ப தெரிவான (09) மாணவிகள், கலைப் பிரிவுக்கு தெரிவான (54) மாணவிகள், வர்த்தக பிரிவுக்கு தெரிவான (14) மாணவிகளுக்கும், 2023 (2024)ல் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 100 வலயங்களில் கல்முனை மஹ்மூத் மகளிர்  கல்லூரியானது இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு ஏதுவாக இருந்த 9A, பெற்ற (26) மாணவர்கள், 8A,B & 8A,C (33) பெற்ற மாணவிகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களின் பங்கேற்புடன் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours