(பாறுக் ஷிஹான்)




யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு  உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என   தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.


திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில்  01ம் மற்றும் 09ம் இலக்கங்களில்  வேட்பாளர்களாக போட்டியிடும் அற்புதலிங்கம் விஷ்கரன் மற்றும் செல்வநாயம் ரசிகரன் ஆகியோரை ஆதரித்து காரைதீவு கிராமிய குழு  மற்றும் கிராம பொது அமைப்புகளால் திங்கட்கிழமை  (04) மாலை ஒழுங்கு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது கல்முனை குட்டி ஜிம் இளைஞர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் வெற்றிக்கு கரம்கோர்த்து பணியாற்ற இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது



இம்முறை பாராளுமன்றப் பொது தேர்தலில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிபோய்விடக்கூடாது என்பதனால் கடந்த காலங்களில் இங்கு போட்டியிடுவதிலிருந்து நாம் விலகியிருந்தோம்.

கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு  உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம். மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் நாம் ஆழ வேரூன்றி அகலக்கால் பதித்துள்ளோம். அங்கே நடந்துள்ள  அபிவிருத்திப் பணிகளைப் போன்று அம்பாறை மக்களுக்காகவும் எதிர்காலத்தில் எம்மால் செய்ய முடியும்.

கடந்த தேர்தலில் தோல்வி கண்ட அந்த போலித் தமிழ் தேசியவாதிகள் அம்பாறை மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்தலில் அம்பாறையில் போட்டியிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றுக்கு இரண்டாக வந்து இங்கே வீடென்றும் சங்கென்றும் பிரித்து நின்று அம்பாறை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் துணிந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் வெல்லப்போவதில்லை. கடந்த தேர்தல்ளில் ஒன்றாக நின்றபோதே அவர்கள் தோல்வி அடைந்தார்கள். ஆனால் தற்போது எப்படியாவது ஆயிரம்  இரண்டாயிரம் என்று சேகரித்த  அவ்வாக்குகளால் தங்களுக்கு ஒரு தேசிய பட்டியலை பெற்றுக்கொள்வதே அவர்களது தந்திரமான நோக்கமாகும். யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.

ஆயுதப் போராட்டக்களத்தில் ஆகுதியானவர்களின் குடும்பங்களும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களும் அல்லலுறுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. முன்னாள்  போராளிகள் வாழ்வாதாரங்களின்றி கைவிடப்பட்டுள்ளனர். கல்முனை  காரைதீவு  திருக்கோவில் போன்ற பிரதேசங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் நிர்வாக நெருக்கடிகளுக்கு  உள்ளாகி அலைகின்றனர். கடலோர மீனவர்களுக்குரிய நவீன வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. ஏழை   மக்கள் சமூக பிரச்சினைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 சம்மாந்துறை  நாவிதன்வெளி மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் வாழும் எமது மக்கள் கவனிப்பாரற்றவர்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். சகோதர இனத்தின் நிர்வாகப் பயங்கரவாதம் கொடிகட்டிப் பறக்கின்றது. வீரமுனைக் கிராமத்து மக்களுக்கு ஒரு வரவேற்பு கோபுரம் அமைக்கும் உரிமை கூட நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தனைக்கும் வீரமுனைப் பிரதேசமானது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்புத் தமிழகத்துடன் கருக்கொண்ட வரலாற்றுப் புகழ் மிக்க இடமாகும். இறுதியாக எமது பிரசன்னமே அந்தப் பிரச்சினையை பகிரங்கப்படுத்தியது.

பல கிராமங்களில் தரமான பாடசாலைகள் இல்லை. மின்சார வசதிகள் இல்லை. தரமான வீதிகள் இல்லை. பல இடங்களில் வைத்தியசாலை வசதிகளில்லை. இருக்கும் வைத்தியசாலைகள் எவ்வித வசதிகளும் இன்றி கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாணவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. விளையாட்டு மைதானங்கள் இல்லை. இறந்து போகின்ற மனிதர்களுக்குரிய மயானங்கள் கூட உரிய வசதிகளின்றி காடுமண்டிக் கிடக்கின்றன. குறிப்பாக பொத்துவில் செங்காமம் கிராம மக்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல அவலங்களோடு வாழ்கின்றனர். இக் கிராமத்தில் ஒரு பாடசாலைகூட இல்லாமல் அடிப்படைக் கல்வியைக் கூட தொடர முடியாத நிலையே காணப்படுகின்றது.

ஏன் சாகாமம் குடிநிலம் பகுதிகளைப் பாருங்கள் அங்கே உள்ள மீனவர்கள் வலைகள் கூட இன்றி வாடுகின்றனர். யானை வேலிகள் இல்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரவு நேரத்தினை கழிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அல்லலுறுகின்றனர். அக்கரைப்பற்று தமிழர்கள் அடிமைச்சந்தைகளைப்போல கூலி சந்தைகளை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வு என்பது இழப்பதற்கு உழைப்பைத் தவிர எதுமில்லை என்னும் கையறு நிலையில் வந்து நிற்கின்றது.

இன்று கவனிப்பார் அற்றவர்களாக  உறுதிமிக்க அரசியல் பிரதிநிதிகள்  அற்றவர்களாக  சுருங்கச் சொன்னால் அரசியல் குரலற்ற  ஒரு அனாதை குழுவினராக சீரழிந்து கிடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இவையனைத்தையும் நாம் மாற்றியாக வேண்டும். அம்பாறை தமிழர்களுக்கு மட்டுமல்ல கிழக்குத் தமிழர்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் ஒரு அரசியல் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கமாக தலைமை கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம்.

ஆகவே எமது கரங்களைப் பலப்படுத்த முன்வாருங்கள். கிழக்கு மக்களின் குரலான தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கீழ் ஓரணியாய் திரண்டு எமது பலத்தினை நிரூபிப்போம். 'கிழக்கு நமதே' என்று முழங்குவோம் என குறிப்பிட்டார் .











--
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours