ஆயுத களத்தில் எவ்வாறு உண்மைக்கு உண்மையாகப் போராடினோமோ அதே உண்மையோடும், நெஞ்சுரத்தோடும் பாராளுமன்றத்தில் எமது மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து அதன் தீர்வுக்காகப் போராடுவோம். நாட்டின் உயரிய சபையில் போராளிகளின் குரல்களை ஒலிக்கச் செய்வது தமிழ் மக்களின் கடப்பாடாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வாழ்க்கையில் எமது மக்களுக்காக கடந்த 35 வருட காலமாக ஆயுத ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி போராடிக் கொண்டிருக்கின்றோம். யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை முன்னாள் போராளிகளை அரசியல் ரீதியில் இணைத்துக் கொள்வதற்கு எவரும் முன்வரவில்லை. ஆனால் இம்முறை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியூடாக வடகிழக்குப் பிரதேசங்களில் நான்கு மாவட்டங்களில் ஐந்து முன்னாள் போராளிகள் இந்தப் பாரளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளோம். 

யுத்த களம் கண்ட போராளிகள் எமக்கு இந்தத் தேர்தல் களம் என்பது புதிதாக இருந்தாலும், எமது தமிழ் மக்கள் போராளிகள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மேலாக முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களையும் மனதில் நிறுத்தி இந்தக் களத்திலும் எங்கள் கால்களைப் பதித்துள்ளோம். 

எனவே உங்களுக்காகப் போராடிய முன்னாள் போராளிகளை அனைத்துத் தமிழர்களும், மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும் இணைந்து வெல்ல வைக்க வேண்டும் என வினயமாகவும், அன்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்று தொட்டு மக்களோடு மக்களாகச் செயற்பட்டவர்கள் நாம். இந்த பதினைந்து வருட காலமாக எமது மக்களின் நிலைமைகளையும், வலிகளையும் தீர ஆராய்ந்தே இந்தக் களத்தில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். சிறந்த முறையிலான திட்டமிடலுடன் பல வேலைத்திட்டங்களையும் கருத்தில் வைத்திருக்கின்றோம். எமது மக்கள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான கட்டமைப்பினை உருவாக்கி அவர்களின் வாழ்வாதர முன்னேற்றத்தினை மையமாகக் கொண்டு எமது திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இனி ஒருபோதும் எமது போராளிகள் எவரையும் நம்பி ஏமாறாத வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களே மேம்படுத்தும் விதமான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

இதற்கானதொரு அங்கீகாரத்தினையே நாங்கள் உங்கள் முன் கோரி நிற்கின்றோம். நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் சங்குச் சின்னத்தில் 3ம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன். நாட்டின் உயரிய சபையில் போராளிகளின் குரல்களை ஒலிக்கச் செய்வதுதான் தமிழ் மக்களின் கடப்பாடு. மக்கள் அதற்கான ஆணையை எமக்கு வழங்க வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தில் எவ்வாறு உயிரைத் துச்சமென நினைத்து உண்மைக்கு உண்மையாகக் களத்தில் போராடினோமோ அதே உண்மையோடும், நெஞ்சுரத்தோடும் பாராளுமன்றத்தில் எமது மக்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து அதன் தீர்வுக்காகப் போராடுவோம். 

மக்களின் கருத்துகளூடாக மக்களுக்கான சேவகர்களாக மாத்திரமே நாங்கள் என்றும் செயற்படுவோம் என்று தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours