2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகிக்கின்றது.

இதேவேளை, இதுவரை வெளியான பெறுபேறுகளுக்கமைய, கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பலஉறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ படுதோல்வியடைந்து தனது ஆசனத்தை இழந்துள்ளார்.

அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆசனத்தைப் பெறத் தவறிவிட்டது.

இதேவேளை முன்னாள் தமிழ் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அங்கஜன் ராமநாதன், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வி அடைந்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர்களான காஞ்சனா விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, ஷசீந்திர ராஜபக்ஷ உட்பட பலர் தோல்வி அடைந்துள்னர்.இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்த வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்தகுமார் பதுளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

அதேவேளை முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னக்கோன் மற்றும் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். 

முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, டீ.பி.ஹேரத், ஷாந்த பண்டார, அசங்க நவரத்ன ஆகியோரும் தோல்வி அடைந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன அனுராதபுரம் மாவட்டத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours