மாளிகைக்காடு செய்தியாளர்

காலம் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தன்னகத்தே வைத்திருந்த கல்முனை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதன் ஊடாக தனக்கான  பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க பாரிய சதி ஒன்றை அரங்கேற்றியுள்ளனர். என சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான பெண்கள் பங்கு கொண்ட சந்திப்பு ஒன்றில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும்  கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ஜெமீல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஷுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளதை அறிந்து, கல்முனைக்கான பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்த நான், புதிய ஜனநாயக முன்னணியின் ஊடாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை சகோதரர் ஹரீஷுக்கு வழங்கி கல்முனையை அழகு பார்க்க விரும்பினேன். என்றாலும் அவர் மனதளவில் உடைந்திருந்ததால்  என்னை களத்தில் இறங்குமாறும் எனக்கு உதவுவதாகவும் கூறினார். அதன் பின்னரே இறுதி நேரத்தில் கையொப்பமிட்டு தேர்தலில் குதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நமது பிராந்தியம் பல்வேறு தேவைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது என்றால் மக்களின் சார்பில் சிறந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். தற்போது களத்தில் இறங்கியுள்ளவர்களுடன் என்னையும் ஒப்பிட்டு நான் சிறந்தவன் என்றால் எனக்கு வாக்களியுங்கள். கடந்த காலங்களில் எனக்குக் கிடைத்த அதிகாரங்களை வைத்து இந்த பிராந்தியத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களை செய்துள்ளேன். அத்துடன் நமது பிராந்தியத்தில் பாரிய பல்கலைக்கழகம் ஒன்று உருவாக மறைந்த தலைவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து கல்விகற்று, தன்னால் முடிந்தவைகளை செய்துள்ளதாகவும் நமது பிராந்தியத்தினதும் மக்களினதும் தேவைகளை நன்கு அறிந்தவன் என்றும் மக்களின் பணிக்காக தன்னை எப்பவே அர்ப்பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது அழைப்பை ஏற்று பாரிய அளவிலான பெண்கள் குழுமியுள்ளது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் பின்னிற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வின்போது ஸ்ரீ லங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், தேசியப்பட்டியல் வேட்பாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, அக்கட்சியின்  தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா  உமர்,  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இணைப்பாளர் பர்சாத் கான், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுகைல் அஸீஸ் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன், அஸ்வர் அப்துல் சலாம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours