பாறுக் ஷிஹான்



மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம்  திங்கட்கிழமை  (02) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த  அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையினை கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையினை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

 மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக குறித்த அரபுக் கல்லூரியின் ஆறு மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தமை யாவரும் அறிந்ததே.

இதனையடுத்து  குறித்த  அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் டிசம்பர் 02 திகதி  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனைய இவரும்  பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை   (02)  சம்மாந்துறை நீதவான் டி. கருணாகரன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபூல் உலும் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதவான்  உத்தரவு பிறப்பித்தார்.குறித்த விசாரணையின் போது காரைதீவு பிரதேச செயலாளர்  மாவட்ட அனர்த்தன நிவாரண சேவைகள் அதிகாரி ஆகியோரும்   விசாரணையின் போது மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கினை நீதிவான்  எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன்  நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours