நூருல் ஹுதா உமர்
டயகோணியா மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயல் முன்னணி அனுசரணையில் U CAN திட்டத்தின் ஊடாக சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில், விழுமியக் கல்வி ஊடாக, புத்தாக்க சமூக தீர்வுகளை வழங்கும் தொனிப்பொருளில், 'அவசரகால நிலைகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான பயிற்சி நிகழ்வு' இன்று சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்களிடத்தில் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பதில், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நற்செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கிழக்கு மாகாணக் கல்வி திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் ஆகியோரின் பங்குபற்றலுடன் இது நடைபெற்றது.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு அனுபவமிக்கவரும், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. அஸ்லம் சஜா இதில் வளவாளராக கலந்து கொண்டார்.
கடந்தகால அனர்த்த நிலைமைகளின்போது சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் நன்கு பணியாற்றிய தெரிவு செய்யப்பட்ட சில அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் பங்குற்றலுடன் இது முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எதிர்கால அனர்த்தங்களின்போது சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம் மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், இந்தப் பிராந்தியத்தில் அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து உரிய அரச நிறுவனங்களுடன், அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் குழு செயற்பாடுகள் மூலம் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours