(சுமன்)


கடந்த வாரம் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எமது பாராளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன் தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுடனான சந்திப்பினையும் மேற்கொண்டிருந்தோம். இதன் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.

அதில் முதலாவதாக தேசிய இனப்பிரச்சனை தொடர்பான விடயத்தை நியாயமான அடிப்படையில் மிகவும் விரைவாக தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம். அத்துடன் இராணுவத்தினராலும், குடியேறிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிப்பு விடயம் தெரிவிக்கப்பட்டது. அதில் முக்கியமாக மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணி தொடர்பில் வலியுறுத்தியிருந்தோம். நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், கால்நடைகளும் மேய்ச்சற்தரையில்லாத நிலையில் அவஸ்தைக்குள்ளாகியுள்ளமை பற்றித் தெளிவுபடுத்தியுள்ளோம்.  மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன், அதனூடாகக் கைது செய்யப்பட்டுள்ள அரசியற் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்.

அதுமட்டுமல்லாது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மூலமாக கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயமும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் எம்மால் சொல்லப்பட்டதுடன், வடக்கு கிழக்கில் அபிவிருத்தி குன்றிக் காணப்படும் விடயம் பற்றியும் கூறியிருந்தோம். இதன் நிமித்தம் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இவ்விடயங்களை ஜனாதிபதி நுணுக்கமாகவும், அவதானமாகவும் செவிமடுத்தார். இதில் இனப்பிரச்சனை தீர்வு என்ற விடயத்தில் அவர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருக்கின்றார்கள். அந்த திருத்தம் வரும்போது எம்மால் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திற் கொள்வதோடு தென்னிலங்கை மக்களும் இந்த விடயத்தில் குழப்பம் அடையாத விதத்தில் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாக இருப்பினும் கடந்த காலங்களில் நாங்கள் தென்னிலங்கைத் தலைவர்களிடம் எமது இனப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஏமாற்றப்பட்டிருந்தோம். எனவே இவரும் ஒரு தென்னிலங்கைத் தலைவர் என்ற அடிப்படையில் இதற்கான செயற்பாடுகள் இடம்பெறும்போது தான் ஒரு நம்பகத்தன்மையை உணர முடியும்.

அத்துடன் அரசியற்பேரவை உறுப்பினராக எமது பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் போட்டிக்கு மத்தியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயர்மட்ட பதவிகளைத் தெரிவு செய்யும் போது அதனை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது பற்றி முடிவுகளை தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இந்த அரசியற் பேரவைக்கு இருக்கின்றது. இதன்போது சிறுபான்மை அல்லது தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் அந்த சிபாரிசுகளுக்கு ஆதரவு கொடுப்பதா இல்;லைய என்ற விடயங்களையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இன்றைய நிலையில் பாராளுமன்றத்தில் எமது கட்சி மூன்றாவது நிலையில் இருக்கின்றது. அசுரப் பெரும்பான்மையோடு இருந்த கட்சி இன்று மூன்றே மூன்று ஆசனங்களையும். மூன்று ஆசனங்களோடு இருந்தவர்கள் இன்று 159 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றனர். இந்த மாற்றம் என்பது ஒரு தலைகீழான மாற்றமாவே அமைந்திருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றைப் பொருத்தமட்டில் அரசியல் அதிகாரத்தில் இடதுசாரிக் கட்சியொன்று இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இவர்கள் மாற்றத்தைச் செய்யப் போகின்றோம் என்கின்றார்கள் அதனைப் பொருத்திருந்;துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்.

கேள்வி :-
மீண்டும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கு டெலோவின் கூட்டமொன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் உங்க நிலைப்பாடு என்ன?

பதில் :-
உண்மையில் தமிழரசுக் கட்சியாகிய நாங்கள் உள்ளூராட்சி சபைக்காக மாத்திரமே நாள் பிரிந்து செயற்படுவதாகவும் ஆனால் மாகாணசபை, பாராளுமன்றத் தேர்தல்களில் நாங்கள் இணைந்து செயற்படலாம் என்று தான் தெரிவித்திருந்தோம். ஆனால் அதற்குள் அவர்கள் அவசரப்பட்டு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை உருவாக்கி விட்டு நாங்கள் ஏழு கட்சிகள் சேர்ந்திருக்கின்றோம் நீங்கள் தனியாக இருக்கும் காரணத்தினால் நீங்கள் தான் எங்களுடன் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனையெல்லாம் விதித்தார்கள். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளாவது இணைந்து செயற்படுவோம் என்று கூறியிருந்தோம் ஆனால் அதற்கும் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். 

ஆனால் தற்போது தேர்தல் முடிந்த பின்னர் ஒரு தெளிவு பிறந்திருக்கின்றது. ஏழு கட்சிகள் இணைந்து ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றிருக்கின்றது. ஆனல் ஒரு கட்சியாகச் செயற்பட்ட தமிழரசுக் கட்சியானது எட்டு ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. எனவே இங்கே கட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல கட்சிகளுக்கு இருக்கும் வாக்குப் பலம்தான் முக்கியமானது. எனவே அவரகள் இதனைத் தற்போது தெளிவாக விளங்கியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

எனவே இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சி கூடி ஒரு தெளிவான முடிவுகளை எடுக்கும் போது அவர்களும் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். 

இது தொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியில் பதில் சொல்ல முடியாது. எமது கட்சி கூடி ஒரு முடிவினை வெளியிடும். ஆனால் நிபந்தனைகள் விதிப்பது, ஏழு கட்சியுடன் எட்டாவது கட்சியாக இணைந்து கொள்ளுங்கள் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துகள் அல்ல. வாக்குப் பலத்தின் அடிப்படையில் தான் எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் இணைந்துகொள்வது என்று சிந்திக்க வேண்டும். இதில் பெரிது சிறிது என்று எண்ணாமல் சரியாகச் சிந்தித்தால் சரி.

கேள்வி :-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சுமார் 38000 வாக்குகளைப் பெற்றது, தற்போது இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 55000 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்ததான ஆட்சியே இடம்பெறும் என எதிர்வுகூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் :-
தேசிய மட்டத்தில் நடைபெறும் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினர் அவ்வாறான ஒரு நிலைக்கு வந்தாலும், உள்ளூராட்சி சபை தேர்தல், மாகாணசபை தேர்தல்கள் இதிலிருந்து மாறுபட்டவைகள். இதில்  பெரும்பாலும் பெரும்பான்மையின கட்சிகளை விட தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து செயற்படுவது தான்  பொருத்தமாக இருக்கும். 

பெரும்பான்மையினக் கட்சிகள் தமிழ்த் தேசியத்தின் தன்மையை விளங்கிக் கொள்வது குறைவு. ஆனால் தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தியானது நேர்மையாகச் சிந்தித்து தற்போது இனவாதம் மதவாதம் இல்லை என்று சொல்லியிருந்தாலும் கூட எமது பிரச்சனைகள் தீர்ந்தால் தான் நாங்கள் அது தொடர்பில் நம்ப முடியும்.

நாங்களும் கடந்த காலத்திலும் சொன்னது தற்போது இருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு பின் ஒன்றாக இணைகின்ற போது நாங்கள் தென்னிலங்கைக் கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளாமலேயே எங்களுடைய ஆசனங்களின் மூலமாகவே  பலமான ஆட்சியை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் நாம் அன்றும் சொன்னோம். 

எனவே இம்முறையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தேர்தலை முகங்கொடுத்து அவைகள் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். 

ஆனாலும் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டிருப்பதானது மாகாணசபை, உள்ளூராட்சித் தேர்தல்களிலும் ஒரு தாக்கத்தைச் செலுத்தும் என நினைக்கின்றேன். எனவே ஒன்றுபட்டுத் தான் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.

கேள்வி :-
13வது திருத்தம் தொடர்பாக ரின்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டதா?

பதில் :-
ரின்வின் சில்வா 13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றவாறான கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். ஆனால் நாங்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடும் போது அவர் அவ்வாறு எதுவும் கூறவில்லை. வழக்கமாக இருக்கும் 13வது திருத்தம் நடைமுறையில் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அத்துடன் மாகாணசபை முறைமையில் எந்தவொரு அதிகாரமும் குறைக்கப்பட மாட்டாது என்று சொல்லியிருந்தார். அதேநேரம் அந்த அதிகாரங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்ற கருத்தையும் சொல்லியிருந்தார். எனவே கட்சியின் செயலாளர் சொல்லுகின்ற கருத்தை விட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சொல்லுகின்ற கருத்தினையே ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours