தை மாதப் பிறப்பை வரவேற்குமுகமாகவும் விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் முகமாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது .

குடும்பத்துடன் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு பண்டிகையாக தைப்பொங்கல் பண்டிகை திகழ்கின்றது.

 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா இன்று(14) செவ்வாய்க்கிழமை தமிழர் வாழும் பட்டிதொட்டி எல்லாம் நடைபெறுகிறது .

இது ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

உலகமே உணவை நம்பி இருக்கிறது. அதற்கு அடிப்படை விவசாயம் ஆகும். விவசாயத்துக்கு முக்கியமாக  விவசாயி தேவை.  இரண்டுக்கும் முக்கியமானவன் சூரியன் .
அந்த சூரியனை நன்றியோடு நினைந்து வழிபடுகின்ற இயற்கை திருவிழா.


உழவு இல்லையேல் உலகில்லை. வள்ளுவரும் அதனை அழகாக கூறியிருக்கின்றார்.
இயற்கையையே தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் பாரம்பரியம் தற்போது 2025 பொங்கல் பண்டிகை வரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 விவசாயத்திற்கு ஆதாரமான சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரதேவன் மற்றும் விவசாயத்திற்கு உதவி செய்யும் கால்நடைகள் ஆகிய அனைத்திற்குமே நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை, தைத் திருநாள் கொண்டிருக்கும் ஆன்மீக ரீதியான முக்கியத்துவம்

இதே போல ஒரு பக்கம் வாழ்க்கை முறையோடு இணைந்திருக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு மிகப்பெரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

'தை பிறந்தால் வழி பிறக்கும் ' என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில்
வழக்கத்தில் உள்ள பழமொழியும் பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும்
தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை
பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள்.

கல்யாணம் பேச தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள்.
கொடுக்க வேண்டிய காசுக்கும் வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை
எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு
பணம் புரளும். சுப விசேஷங்களுக்கு தை மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம்
நிச்சயதார்த்தம் வளைகாப்பு கிரகப்பிரவேசம் என எல்லா
சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.

புத்தாண்டு அல்லது புது வருடம் என்பது புதிய நாட்காட்டி வருடம்
தொடங்குவதைக் குறிக்கிறது. ஆனால் பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத்
தொடக்கம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து
வரும் கிரெகொரியின் நாட்காட்டியின்படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல்
தேதி தொடங்குகிறது. ஆனால் தமிழுக்கு புதிய வருடம் தை ஒன்றில் பிறக்கிறது. அது இன்று ஆகும்.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் நேரம்!

இந்த வருடத்தில் பொங்கலி டுகின்ற நேரமாக காலை 5 மணி முதல் 6.40 மணி வரையாகும். தவறினால் 7:30 மணி முதல் எட்டு முப்பது மணி வரை அதுவும் தவறினால் 10:30 முதல் 12 30 வரை பொங்கல் இட்டு படைக்கலாம்.
பொங்கல் பொங்கி வழியும் நேரம் "பொங்கலோ பொங்கல்.." என்று கூறி சங்கு நாதம் எழுப்பி வழிபடுதல் வேண்டும்.

பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறோம்?  
அன்று அதிகாலையில் எழுந்து நீராடி புத்தாடை அணிந்து விபூதி தரித்து திலகமிட்டு புதுப் பானையை அலங்கரித்து மஞ்சள் இஞ்சி கட்டி சாமியறையில் வைத்து வழிபட்டு பின்னர் அடுப்பில் ஏற்றவேண்டும்.
உறவினர்கள்,நண்பர்கள், அனைவரையும் வரவழைத்து விளையாட்டுகள் வைத்து அன்று மிக மிக மகிழ்வான தருணங்களாக இருக்கும்.
குறிப்பாக கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள்.


பொங்கல் வகைகள்

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை  நான்கு நாட்கள்  கொண்டாடப்படும் .


1.போகிப் பொங்கல்  

2.தைப்பொங்கல்

3.மாட்டுப்பொங்கல்
 
4.காணும் பொங்கல்

1.போகிப் பொங்கல் 

நம் வீட்டில் உள்ள பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகிப்பண்டிகை என்பார்கள் பொதுவாக. உண்மையில் எமது அகத்தில் மனத்தில் இருக்கிற கெட்ட தீய  எண்ணங்களை அகற்றுவதே அதன் நோக்கமாகும்.

இது பொங்கல் பண்டிகையின் முதல் நாள் ஆகும். அது ஜனவரி 13 ஆம் திகதி போகி கொண்டாடப்படுகிறது.    

 2.தைப்பொங்கல்

புதுப்பானையில் புதிய அரிசியை இட்டு பொங்கல் இடுவர். விவசாயத்துக்கு காரணமாக இருந்த கதிரவனுக்கு சூரிய பொங்கல் படைப்பர். வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் என இரு பானைகளில் பொங்கல் பொங்கி வழிபடுவது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்கு தை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது .அதாவது இவ் வருடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பொங்கல் கொண்டாடப்படுகிறது.  

3.மாட்டுப்பொங்கல்.  

மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் வீர விளையாட்டாக நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.  
இவ் வாண்டு மாட்டுப்பொங்கல் காலை ஒன்பது மணி முதல் 10 .20 வரை அல்லது 11 மணி முதல் 12 30 வரை தவறினால் 1.30 முதல் 2.30 வரை கொண்டாடலாம்.
அன்று முன்னோர்கள் மூத்தவர்கள் நினைவாகவும் வழிபடலாம். கோசாலை சென்று பசுவை கழுவி அலங்கரித்து பசுவுக்கு உணவளித்து கொண்டாடலாம்.

4.காணும் பொங்கல்

நான்காம் நாள் காணும் பொங்கலாகும். இந்நாளில் நண்பர்களும் உறவினர்களும் ஒருவரை ஒருவர் காணும் நாளாகும்.ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் நாளில் அதாவது வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 


 அதே நேரத்தில், தைத்திருநாள் என்பது ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.

தேவர்களின் இரவு காலமான தட்சிணாயன காலம் மார்கழி மாத இறுதி நாளோடு முடிகிறது. தை மாதம் ஒன்றாம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வார். சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் அன்றுதான் தை 1, பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

இது தான் வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், தென் மாநிலங்களில் ஒரு சில இடங்களில் சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி என்பது தேவர்களின் பகல் காலத் தொடக்கமான உத்திராயண புண்ணிய காலத்தை குறிக்கிறது.

இத்தனை சிறப்பு மிக்க பொங்கல் திருநாள் அன்று அனைவரும் பாரம்பரிய முறையில்  பொங்கல் கொண்டாடி மகிழ்வோம்.

வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர் 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours