பாறுக் ஷிஹான்
பொலிஸ் சேவையில் இணைந்து சுமார் 37 வருடங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பணியாற்றி பல பதவியுயர்வுகளையும் பெற்று இறுதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் தலைமை பொலிஸ் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மீரா லெப்பை றபீக்கை கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தலைமையில் அல் ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) மாலை  சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி கே. அஜித் றோஹனவும் கௌரவ அதிதிகளாக  அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே. பண்டார ,அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 சேனாரத்னவும் கலந்து கொண்டனர்.

1988 ஏப்ரல் 10 ஆம் திகதி உப பொலிஸ் உத்தியோகத்தராக சென்றல்கேம்ப் பொலிஸ் நிலையத்தில் தனது பணியை ஆரம்பித்த றபீக், கொழும்பு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனது பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்திருந்தார். அவரது சேவைக்காலத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரபுக்கும் பின்னர் அவரது மணைவி அமைச்சராக இருந்தபோது அவருக்கும் பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி அஜித் றோஹன, ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல். றபீக்  POLICE என்ற சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் பிரதிபலிக்கும் வார்த்தைகளுக்கு ஒப்ப செயற்ப்பட்ட ஓர் சிறந்த அதிகாரி என்றார்.

ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.எல். றபீக், அவரது சேவைக்காலத்தில் மிகுந்த நேர்மையாகவும் பொதுமக்களோடு மிகுந்த அன்னியோன்யமாக பழகுபவராகவும் இருந்தார். அத்துடன் மக்களின் பிரச்சினை தீர்த்து வைப்பதில் பக்கச்சார்பற்ற முறையில் அவர் எடுத்துக்கொண்ட வழிமுறைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

நிகழ்வில் றபீக் அவர்களின் சேவையை பாராட்டி அதிகாரிகளாலும் பொது மக்களாலும் பொன்னாடை போர்த்தி ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வின்போது பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் றபீக் அவர்களது குடும்ப உறவினர்கள், சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர், வர்த்தகர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours