(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களான எம்.எம்.எம். அம்ஸத், ஏ.எச். பௌசுல் அமீன், ஏ.சீ.ஏ. மஸாஹிர், ஏ.ஆர்.எம். றீசா ஆகியோரின் முயற்சியினால் நவீன வசதிகளுடன் கூடிய 40  மலசலகூடங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் மற்றும் 04 மலசலகூடங்கள் புதிதாக அமைக்கப்பட்டும் மொத்தமாக 44 மலசலகூடங்களைக் கையளிக்கும் நிகழ்வு (10) பாடசாலையில் இடம் பெற்றது. 

கல்லூரியின் அதிபர் எம். ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இவ்வேலைத்திட்டத்தை துரித கதியில் மேற்கொண்டு அதனை திறம்பட முடித்த மேற்குறிப்பிட்ட இப் பாடசாலையின் பழைய மாணவர்களும் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர் குழாத்தினரின் பாவனைக்கு உதவும் வகையில் கையளித்தனர்.

கொழும்பைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தனவந்தரினால் மேற் கொள்ளப்பட்ட இப்பாரிய வேலைத்திட்டத்தை கல்முனை சாஹிரா பாடசாலையில் கல்வி கற்ற குறிப்பிட்ட பழைய மாணவர்களின் முயற்சியினால் அதனை இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 

சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் சகல வசதிகளுடன் கூடிய நவீன முறையில் 40 மலசல கூடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டும் மற்றும் 04 மலசலகூடங்கள் புதிதாக அமைக்கப்பட்டும் அன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது இப்பழைய மாணவர்கள் அதிபர் குழாத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி, பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில், பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் டாக்டர் சனூஸ் காரியப்பர் மற்றும் பாடசாலையின் முகாமைத்துவக் குழு மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாரிய வேலைத்திட்டத்தை மிக அவசரமாகவும் நவீன வசதிகளுடனும் செய்து கொடுத்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நலன்விரும்பியான கொடைவள்ளலுக்கும் அதனை இப் பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்த மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours