( வி.ரி. சகாதேவராஜா)


 வீதியில் முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .

இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில்  (9) வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ்அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.

பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் கோமாரி மகா வித்தியாலயத்திற்கும் தபாலகத்திற்கும் இடையேயுள்ள மரத்தின் கீழ் முச்சக்கர வண்டியில் நிற்பது வழக்கம். செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது..

 இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் இன்று முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால்  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது .
அக் கணத்தில் அவர் தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் மரணமானார்.

சம்பவ இடத்திற்கு பொத்துவில் போலீசார் விரைந்தனர். மோதிய வர்  அம்புலன்சில் அனுப்பப்பட்டார்.
 பலியானவர் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகளை பொத்துவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours