பாறுக் ஷிஹான்

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் குப்பை மலையாக காட்சியளித்த   பிரதேசம்  'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.

அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள்,அங்குள்ள புத்தங்கல வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மலையொன்று உருவாகியிருந்தது.

இதற்கிடையே, குப்பை மலைக்கு யானைகள் உணவு தேடி வரத் தொடங்கியதன் காரணமாக அப்பிரதேசத்தின் ஊடான போக்குவரத்து பாதுகாப்பற்றதாக மாறியது.கடந்த ஞாயிற்றுக்கிழமை(16) ஆரம்பமான இச்சிரமதானம் தற்போது வரை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அம்பாறையில் நடைபெற்ற பொசோன் வலயத்தைப் பார்வையிடச் சென்ற 65 வயதான முதியவர் ஒருவரும், இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தரும் புத்தங்கல பிரதேசத்தில் வைத்து காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.தாக்குதலுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்த நிலையில்,பொலிஸ் உத்தியோகத்தர் நீண்ட நாள் சிகிச்சையின் பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.

அது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் அதற்கு முன்னரும் இடம்பெற்றிருந்தன.அதேபோன்று, இரசாயனக் கலவைகள் கொண்ட குப்பைகளை உணவாக உட்கொண்டதன் காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் புத்தங்கல குப்பை மலையில் காட்டுயானையொன்று உயிரிழந்திருந்தது.

இந்நிலையில்  குறித்த குப்பை மலை   'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயற்திட்டத்தின் ஊடாக சுத்தப்படுத்தப்பட்டு  அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் உண்பதற்கு  10க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவித்திருந்தன.  அம்பாறை நகரப்பகுதி  உள்ளிட்ட ஏனைய புற நகர  பிரதேசங்களில் இருந்து   இப்பகுதிக்கு குப்பைகள்  மாநகர மற்றும் பிரதேச சபையின் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு  கடந்த காலங்களில்  கொட்டப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


 இதனால் அம்பாறை நகரில் இருந்து   குப்பைகள் வாகனங்கள் மூலம் தினமும்  கொண்டுவரப்பட்டு   கொட்டப்படுகின்றதுடன் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது.காட்டு யானைகளுக்கும், அவ்வழியால் போக்குவரத்தில் ஈடுபட்ட மனிதர்களுக்கும் பெரும் ஆபத்தாக இருந்த புத்தங்கல குப்பை மலை அகற்றப்பட்டமை தொடர்பில் அம்பாறை பிரதேச சிவில் சமூக அமைப்புகள் பலவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours