நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் உள்ள மத்திய அரசின் ஆதார வைத்தியசாலைகளின் வளங்களை மாகாண ஆதார வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்து பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவதற்குரிய விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், அத்தியட்சகர் களுடன் கலந்துரையாடலொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.ரகுமான் உட்பட சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோயில், பொத்துவில் ஆதார வைத்தியசாலை களின் வைத்திய அத்தியட்சகர் களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பொதுமக்களுக்கு சுகாதார சேவையை வழங்குகின்ற போது சுகாதார நிறுவனங்கள் சுகாதார வசதிகளை பகிர்ந்து கொள்வதில் எதிர்நோக்குகின்ற சவால்கள், சுகாதார சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கல்முனை பிராந்தியத்தில் மத்திய அரசின் கீழுள்ள 4 ஆதார வைத்தியசாலைகளும், மாகாண அமைச்சின் 3 ஆதார வைத்தியசாலைகளும், 14 பிரதேச வைத்தியசாலைகள், 13 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் 8 ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவுகள் ஊடாகவும் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours