மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட  துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் மற்றும் மேட்டுவட்டை குளக்கட்டுகளிலும் மாட்டெலும்பு மற்றும் கோழிக்கழிவுகளை இரவுவேளைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவேளைகளிலும்   தொடர்ச்சியாக வீசிச்செல்வதனால் துர்நாற்றம்வீசுவதுடன் அவ்வீதியால் செல்லமுடியாத அவலநிலை உருவாகியுள்ளதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியானது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் வீதியாகும் அதேவேளை துறைநீலாவணைக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபைக்குட்டதாக  இருப்பதுடன் துறைநீலாவணைக்குச் செல்லும் வீதியானது கல்முனை மாநகரசபைக்குட்பட்டதாக இருக்கின்றது.

இவ்வீதியின் இருமருங்கிலும் நாளாந்தம் மருதமுனைப்பிரதேசத்தில் அறுக்கப்படுகின்ற கோழிகள் மற்றும் மாட்டெலும்புகள் ஏனைய கழிவுகள் என்பவற்றினை உரப்பையில் பொதிசெய்து  வீதியால் வருபவர்கள்போல் வந்து வீதியின் இருமருங்கிலும் அருகில் இருக்கும் குளத்து நீருக்குள்ளும் வீசிவிட்டுச் செல்லுகின்றனர். இதனால் இக்கழிவுகளை காகம் நாய்போன்ற பிராணிகள் உண்ணுவதற்கு வருவதுடன் வீதியால் செல்லும் பிரயாணிகள் நாய்க்கடிக்கு உள்ளாகுவதுடன் வீதியால் செல்லமுடியாத அளவிற்குத் துர்நாற்றமும் வீசுகின்றது.

இவ்வீதியின் அருகில் இருக்கின்ற வட்டிக்குளம் பொதுக்குளம் ஆழ்வாங்குளம் ஆகியவற்றில் மழைநீரினைத்தேக்கி மேட்டுவட்டை வயல்பிரதேசத்தில் நெற்பயிருக்கு நீர்ப்பாய்ச்சி வரும் நிலையில் இக்கழிவுகளை குளத்துக்குள்ளும் வீசுவதனால் நீர்மாசடைந்துவருவதுடன் விவசாயமும் பாதிப்புக்குள்ளாகிவருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தில் பல இடங்கள்  தூய்மைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் துறைநீலாவணை பிரதான வீதியில் தொடர்ச்சியாக கழிவுகள் வீசப்படும் இடமாக மாறிக்கொண்டு வருவதுடன் இதனைக் கட்டுப்படுத்துவது கல்முனை மாநகரசபையா? அல்லது மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேசசபையா? என மக்கள்கேள்வி எழுப்புவதுடன் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்யும் மனிதநேயமற்ற நபர்களை; கழிவை வீசும்போது பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க இருப்பதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுவதுடன் இவ்வாறு கழிவு கொட்டுவதனை தடைசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                          09.03.2025 அன்று மாட்டெலும்பு ஏற்றிவந்து வீசிய வாகனம்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours