(அஸ்லம் எஸ்.மெளலானா)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர் எம்.எஸ்.நளீம் அவர்கள் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சரித்திரத்தில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய தலைப்புச் செய்தியாகும் என்று கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது சம்பந்தமாக முன்னுதாரணமாக இருந்தது மாத்திரமல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 04 மாதங்களுக்குள் ராஜினாமா செய்த முதல் தடவையாகும்.
இக்கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்த வெற்றிடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை நிரப்பப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தங்களுக்கு பிரதேசத்துக்கு கொடுத்து இந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை கட்சிக்கு நிரூபித்து காட்ட வேண்டும்.
உண்மையில் கட்சி எதிர்பார்ப்பது யாதெனில், அந்தப் பிரதேசமூம் எதிர்பார்க்கும் கட்சி உறுப்பினர்களும் அந்தந்த பிரதேசத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அதிகாரத்தை நிலைநாட்டி தங்களுக்கும் தங்களுடைய பிரதேசத்திற்கும் இப்பதவி வழங்குவதற்கு நியாயபூர்வமான நியாயம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும்.
மேலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குரிய தேசியப் பட்டியல் எம்.பி பதவியானது குறைந்தபட்சம் ஐந்து பிரதேசங்களுக்கு தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours