( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தில் பழமை வாய்ந்த
அம்பாரை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப் பாதை பெரிய வெள்ளிக்கிழமையான  நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைகளை சுமந்தவாறு 6ஆம் கொளனி அந்தோனியார் ஆலயம் மற்றும் வீரமுனை சந்தி ஆகியவற்றிலிருந்து நடைவணி மேற்கொண்டு சம்மாந்துறை சொறிக்கல்முனை பிரதான வீதிவழியாக திருத்தலத்தை வந்தடைந்தனர்.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத் தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட நாட்டின் நாலாபுறமிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

இதற்கமைவாக  இரவு முழுவதும் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் வகையிலான சிலுவையில் சிதைக்கப்பட்ட இயேசுவின் திருப்பாடுகளின் காட்சிகள் திருத்தல வளாகத்தில் (பாஸ்கா) இடம்பெற்றது.

இயேசு நாதர் அறையப்பட்டு மரணித்த திருசிலுவையின் ஒரு பகுதி இந்தியாவிலுள்ள கோவை நகரிலிருந்து எடுத்துவரப்பட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது இவ் ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours